மோர்பி பாலத்தை பார்வையிட பிரதமர் மோடி சென்றதற்கு ரூ.30 கோடி செலவு என ஆர்டிஐ தகவல் வெளியானதா ?

பரவிய செய்தி

மோர்பி பாலம் அறுந்து 135 பேர் பலியான விவகாரத்தில் நிகழ்விடத்தை பார்வையிட சென்ற பிரதமர் மோடியின் பயணத்திற்கு ரூ.30 கோடி செலவு: அதிர்ச்சி தகவல்

News link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி பாலம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அப்போது குஜராத்தில் இருந்த பிரதமர் மோடி விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட சென்ற போது, அதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.30 கோடி என ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளதாக தினகரன், சன் நியூஸ், சத்யம் நியூஸ் உள்ளிட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

Archive link 

Archive link 

ஆர்.டி.ஐ தகவலின்படி, ” பிரதமர் மோடியின் வருகைக்காக ஒரே இரவில் ரூ.11 கோடி செலவில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மருத்துவமனையை தயார் செய்ய ரூ.8 கோடி செலவிடப்பட்டு உள்ளது. பிரதமருக்கு வரவேற்பு அளிக்க ரூ.3 கோடியும், பாதுகாப்பிற்கு ரூ.2.50 கோடியும், நிகழ்ச்சி மேலாண்மைக்கு ரூ.2 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது. 2 இடங்களில் பிரதமரின் வருகையை புகைப்படம் எடுக்க மட்டும் ரூ.50 லட்சம் செலவிடப்பட்டு உள்ளதாகவும் மோர்பி நிர்வாகம் தெரிவித்து உள்ளதாக ” செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

மேலும், விபத்தில் உயிரிழந்த 135 பேருக்கு மொத்தமே இழப்பீடாக ரூ.5 கோடி மட்டுமே வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

உண்மை என்ன ? 

மோர்பி பால விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை மோசமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. பின்னர், பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வருவதாக தகவல் வெளியான நிலையில், மோர்பி அரசு மருத்துவமனை மற்றும் சாலையை சீரமைக்கும் பணிகள் வேக வேகமாக நடைபெற்றது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது.

Twitter link | Archive link 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் சாகத் கோகலே, ” மோர்பி பாலத்தை சில மணி நேரம் மோடி பார்வையிட்டதற்கு ரூ.30 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்துள்ளது ” என குஜராத்தியில் வெளியான செய்தித்தாள் பக்கங்களின் படங்களை இணைத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இவரின் பதிவிற்கு பின்பே இத்தகவல் செய்திகளில் வெளியாகியது.

Twitter link | Archive link

ஆனால், சாகத் கோகலே ட்விட்டரில் Dax Patel எனும் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவையே பதிவிட்டு இருந்துள்ளார். அவர் பதிவிட்ட Dax Patel ட்விட்டர் பக்கத்தின் பதிவில், இந்த செய்தியை யார் வெளியிட்டது எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு ” குஜராத் சமாச்சர் “ எனும் செய்தித்தளம் வெளியிட்டதாக கூறப்பட்டு உள்ளது.

ஆனால், குஜராத் சமாச்சர் செய்தித்தளத்தில் ” ஆர்.டி.ஐ ” தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியாகி இருக்கிறதா எனத் தேடுகையில், கடந்த சில நாட்களில் குஜராத் சமாச்சர் உடைய இபேப்பரில் அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

மேலும், பிரதமர் மோடி மோர்பி பால நிகழ்விடத்தை காண வந்த போது ரூ.30 கோடி செலவிடப்பட்டது என ஆர்.டி.ஐ தகவல் வெளியாகியதாக அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது முன்னணி செய்திகளோ ஏதும் வெளிவரவில்லை.

Twitter link 

மேலும், PIB Factcheck ட்விட்டர் பக்கத்தில், ” இது போலியான செய்தி என்றும், இப்படியொரு ஆர்.டி.ஐ தகவலே வெளியாகவில்லை என்றும் ” தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆர்.டி.ஐ குறித்து பதிவிட்ட சாகத் கோகலே பதிவிற்கு குஜராத் பாஜக தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், குஜராத் மோர்பி பால விபத்தின் நிகழ்விடத்தை பார்வையிட சென்ற பிரதமர் மோடியின் பணத்திற்கு ரூ.30 கோடி செலவு என ஆர்.டி.ஐ தகவலில் வெளியாகியதாக பரவும் செய்திகள் தவறானது. அப்படி எந்த ஆர்.டி.ஐ தகவலும் வெளியாகவில்லை என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader