மோடி, திரௌபதி முர்மு, ஏக்நாத் ஷிண்டேவின் எளிமையான வாழ்க்கை எனப் பரப்பப்படும் போலி புகைப்படங்கள் !

பரவிய செய்தி

மேல் இடதுபுறத்தில் உள்ள துப்புரவு செய்பவர், இப்போது இந்தியாவின் பிரதமர் (நரேந்திர மோடி). பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த ஏழைப் பெண், இப்போது இந்தியாவின் குடியரசுத் தலைவர் (திரௌபதி முர்மு). கீழே இடது படத்தில் உள்ள புனிதர் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யின் (யோகி ஆதித்யநாத்) முதலமைச்சராக உள்ளார். கீழே வலது படத்தில் உள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவர் இப்போது மும்பையை உள்ளடக்கிய இந்தியாவின் பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவின் முதல்வர் (ஏக்நாத் ஷிண்டே). மிகவும் நம்பமுடியாத பயணங்கள் இவை அனைத்தும் ஒரு ஆர்எஸ்எஸ் நாள் மட்டுமே செய்ய முடியும்.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

ந்தியாவின் பிரதமராக உள்ள நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே போன்றோர் தங்களின் ஆரம்பக்கால வாழ்க்கையில் எளிமையாக இருந்துள்ளனர். தற்போது இவர்கள் இந்தியாவின் முக்கிய பொறுப்புகளில் தலைவர்களாக உள்ளனர் எனக் கூறி இப்புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Archive link 

மேலும், இத்தகைய மாற்றங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் மட்டுமே சாத்தியப்படும் என அப்பதிவுகளில் குறிப்பிட்டுப் பரப்பி வருகின்றனர்.

 

உண்மை என்ன ?

முதலாவது புகைப்படம் : 

பிரதமர் மோடி இளமை வயதில் துப்புரவு பணி செய்ததாகப் பரவும் கருப்பு வெள்ளை புகைப்படத்தைக் கூகுளில் ரிவேர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘தி வயர்’ என்னும் இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘My Dear Chief Minister … Three Letters Nehru Wrote That Indians Today Need to Read’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள அக்கட்டுரையில் துப்புரவு பணி செய்யக்கூடிய ஒருவரது புகைப்படம் உள்ளது. ஆனால், அது மோடி அல்ல.

அப்புகைப்படத்தின் கீழே “1946, ஜூன் மாதம் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு தேடியதில் ‘Old Indian Photos’ என்னும் இணையதளத்திலும் அப்புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து 1946ம் ஆண்டு ஒருவர் துப்புரவு பணி செய்யும் புகைப்படத்தில் மோடியின் முகம் இருப்பது போல எடிட் செய்து இருப்பதை அறிய முடிகிறது.

இரண்டாவது புகைப்படம் : 

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எனப் பரவும் புகைப்படத்தைக் கூகுள் ரிவேர்ஸ் இமேஜ்  சர்ச் மூலம் தேடினோம். 2022, ஜூலை மாதம் திரௌபதி முர்மு பற்றி ‘நியூஸ் 18’ இணையதளத்தில் கட்டுரை ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. 

சுகுமார் டுடு (Sukumar Tudu)

அக்கட்டுரையில் பரவக்கூடிய புகைப்படம் உள்ளது. ஆனால், அப்பெண்மணியின் பெயர் சுகுமார் டுடு (Sukumar Tudu) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  பிறந்த உபர்பேடாவில் அமைந்துள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வருகிறார் என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதிலிருந்து பரவக் கூடிய புகைப்படத்தில் இருப்பது திரௌபதி முர்மு இல்லை என்பது உறுதியாகிறது.

மூன்றாவது புகைப்படம் : 

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எனப் பரவும் புகைப்படத்தைக் கூகுள் ரிவேர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். 2017ம் ஆண்டு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளத்தில் ராமர் கோயில் கட்டுவது குறித்துக் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பரவக் கூடிய புகைப்படம் யோகி ஆதித்யநாத் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதே போல், ‘ScoopWhoop’ என்னும் இணையதளத்திலும் யோகி பற்றிய கட்டுரையிலும் அப்புகைப்படம் உள்ளது. யோகி குறித்து ‘Amar Ujala’ இணையதளம் வெளியிட்டுள்ள புகைப்படத் தொகுப்பிலும் பரவக் கூடிய படம் உள்ளதைக் காண முடிகிறது. இதிலிருந்து பரவக்கூடிய படத்தில் இருப்பது யோகி ஆதித்தியநாத் என்பதை அறிய முடிகிறது.

நான்காவது புகைப்படம் : 

மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒரு ஆட்டோ ஓட்டுனர் எனப் பரவும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். 2022ம் ஆண்டு இப்புகைப்படம் இணையத்தில் வைரலானபோது ‘அஜ் டக்’ என்னும் யூடியூப் பக்கம் அப்புகைப்படத்தில் இருப்பவர் பாபா காம்ப்ளே என்று வீடியோ பதிவிட்டுள்ளது. 

Video link 

மேலும், ‘மகாராஷ்டிரா ரிக்ஷா பஞ்சாயத்து புனே’ என்னும் பேஸ்புக் பக்கத்திலும் பரவக்கூடிய புகைப்படத்தில் இருப்பது ‘பாபா காம்ப்ளே’ எனப் பதிவிட்டுள்ளனர். அதில் அந்நபரும் பேசியுள்ளார். பாபா காம்ப்ளே 1997ம் ஆண்டு ரிக்ஷா யூனியன் தலைவராக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து பரவக் கூடிய புகைப்படத்தில் இருப்பது ஏக்நாத் ஷிண்டே இல்லை என்பதை அறிய முடிகிறது.

முடிவு : 

நம் தேடலில், பரவக் கூடிய நான்கு புகைப்படங்களில் யோகி ஆதித்யநாத் படம் மட்டுமே அவரது இளமைக் காலத்தில் எடுக்கப்பட்டது. மோடியின் முகம் உள்ள புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. திரௌபதி முர்மு, ஏக்நாத் ஷிண்டே என இடம்பெற்ற புகைப்படங்கள் வேறு நபர்களுடையது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader