மோடி ஆட்சியில் பெட்ரோலில் “டயமாட்டோல்” எனும் பொருள் சேர்க்கப்படுவதாக பரவும் நையாண்டிப்பதிவு !

பரவிய செய்தி
பெட்ரோல் விலை கூடிருச்சு என்கிறார்கள் ! மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலில் ‘டயமாட்டோல்’ என்ற பொருள் சேர்க்கப்படுகிறது. இது இந்திய விஞ்ஞானிகளால் ரகசியமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதைச் சேர்த்த பிறகு கார்களின் இன்ஜினுக்குள் ஒரு மாற்றம் ஏற்படும். அதாவது லிட்டருக்கு 15 கிலோமீட்டர் ஓடும் கார், நமக்குத் தெரியாமலே 30 கிலோமீட்டர் போகும். அதாவது நீங்கள் 80 ரூபாய்க்கு போடும் பெட்ரோல் விலையின் மதிப்பு 40 ரூபாய்தான். இந்த ரகசியத்தை சொன்னால் வெளிநாட்டு விஞ்ஞானிகள் அதை பயன்படுத்துவார்கள் என்றுதான் நாட்டுக்காக பழியை சுமக்கிறார் மோடி.

மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவையின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகையில், இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலில் பிரதமர் மோடி இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ” டயமாட்டோல் ” எனும் பொருளை ரகசியமாக சேர்ப்பதாகவும், அதனால் ஒரு லிட்டருக்கு 15 கி.மீ போகும் கார் 30 கி.மீ போவதாக பாலா ராஜமாணிக்கம் என்பவர் முகநூலில் பதிவிட்ட பதிவின் ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாஜக ஆதரவாளர்களை கிண்டலடித்து இப்பதிவு முகநூல் உள்ளிட்டவையில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. டயமாட்டோல் எனும் பெயரில் பொருள் இருப்பதாக எந்தவொரு தகவலும் இல்லை. இது நிச்சயம் கிண்டலுக்காக வெளியிடப்பட்ட நையாண்டிப்பதிவு எனத் தெளிவாய் தெரிகிறது.
பாலா ராஜமாணிக்கம் என்பவரின் முகநூல் பக்கத்தை கண்டறிந்து வைரலாகும் பதிவு குறித்து தேடிப் பார்க்கையில், ” பெட்ரோல் விலை கூடும்போதெல்லாம் இந்த ஸ்க்ரீன்சாட்டை ரவுண்ட்ல விட்றானுக ” என வைரலாகும் தன்னுடைய பதிவின் ஸ்க்ரீன்ஷார்ட்டை மீண்டும் பதிவிட்டு இருக்கிறார்.
பெட்ரோல் விலை ஏற்றத்தின் போது பதிவிட்ட நையாண்டிப்பதிவை போன்று மீண்டும் சமையல் எரிவாயு சிலை உயர்ந்த நேரத்தில் நையாண்டிப்பதிவு ஒன்றை தன்னுடைய முகநூலில் பதிவிட்டு உள்ளார்.
இதற்கு முன்பாக, இந்தியா அனுப்பிய சந்திராயன்-2 விண்கலத்தில் பிரதமர் மோடி டன் கணக்கில் தங்கத்தை அனுப்பி வைத்ததாக நையாண்டிப்பதிவு ஒன்று பாஜக ஆதரவாளர்கள் வெளியிட்டதாக வைரலாகியது. அதேபோல், டயமாட்டோல் நையாண்டிப்பதிவும் தவறாக வைரலாகி வருகிறது.