ஜூலை 28-ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகிறார். இதற்காக நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர்கள் ஏ.வ .வேலு, மெய்யநாதன், மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கமிஷனர், ” பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிவிடுவோர் கண்காணிக்கப்படுகின்றனர், பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் உடனடி கைது செய்யப்படுவார்கள் ” எனக் கூறியதாக முன்னணி செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. இந்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
அரசியல் ரீதியாக பாஜக மற்றும் பிரதமர் மோடியை எதிர்க்கும் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் மோடி வருகையின் போது gobackmodi எனும் ஹாஷ்டாக்கை ட்ரெண்ட்ங் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இம்முறை திமுக ஆட்சியில் சென்னை கமிஷனர், பிரதமர் மோடிக்கு எதிராக பதிவிட்டாலே கைது நடவடிக்கை எனக் கூறியதாக ஊடகங்கள் தவறான செய்தியை பரப்பி உள்ளனர்.
.
உண்மை என்ன ?
.
சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” நேரு உள் விளையாட்டு அரங்கில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேரு விளையாட்டு அரங்கம் அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை மாநகரில் 28, 29-ம் தேதிகளில் ஹிலியம் பலூன்கள், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது ” எனத் தெரிவித்து உள்ளார்.
அப்போது நிருபர் ஒருவர், பிரதமர் மோடிக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டம் எதிர்ப்பு தெரிவிக்க போவதாக சொல்கிறார்கள். இதற்கு என்ன நடவடிக்கை சார். முன்னெச்சரிக்கை, அமைப்பு சார்ந்து குறிப்பிட்ட கைது உண்டா ? எனக் கேட்ட கேள்விக்கு, ” வர வர என்ன மாதிரியான செயல்பாடுகள், எதிரான வார்த்தை மற்றும் முயற்சி இருக்கு என்பதைப் பொருத்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும். சோசியல் மீடியா, ஆன்லைன் & ஆஃப்லைன் கண்காணிக்கப்பட்டு வருகிறது ” என்றே பதில் அளித்து இருக்கிறார்.
இதுகுறித்து யூடர்ன் நியூஸ் கார்டு வெளியிட்ட பிறகு, செய்தி ஊடகங்கள் தங்களின் தவறான செய்தி பதிவுகளை நீக்கியும், கட்டுரையில் திருத்தியும் செய்தியை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, புதிய தலைமுறை , நியூஸ் 18 உள்ளிட்ட சேனல்கள் செய்தியை திருத்தி உள்ளன.
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் உடனடி கைது என சென்னை கமிஷனர் கூறியதாக தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. சென்னை கமிஷனர் கூறியதை தவறாக வெளியிட்ட ஊடகங்கள் செய்தியை திருத்தி வருகின்றன என அறிய முடிகிறது.