‘மோடி நினைத்தால் உக்ரைன் போரை நிறுத்த முடியும்’ என அமெரிக்கா கூறியதாக பொய் செய்தி பரப்பிய ஊடகங்கள் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
2022 பிப்ரவரி 20ம் தேதி தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் சுமார் ஒரு வருடமாகியும் இன்னும் நடந்து கொண்டுள்ளது. இப்போரினால் பல கோடி மக்கள் இடம் பெயர்வது மட்டுமல்லாமல் பல ஆயிரம் மக்கள் இறந்தும் உள்ளனர். போர் தொடங்கிய நாள் முதலே போரினை கைவிட வேண்டும் என பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியும் ஷாங்காயில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் “இன்றைய சகாப்தம் போருக்கானது அல்ல” என உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
#சர்வதேசசெய்திகள் | மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரும் – அமெரிக்கா#SunNews | #UkraineRussianWar | #NarendraModi | #America pic.twitter.com/fhMERb4Lan
— Sun News (@sunnewstamil) February 11, 2023
இந்நிலையில், ‘மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷ்யா போரினை முடிவுக்குக் கொண்டுவர முடியும்’ என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாக சன் நியூஸ், தினமலர், தினத்தந்தி, தினகரன், மீடியான், ஒன் இந்தியா, குமுதம், ஐபிசி தமிழ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உள்ளிட்ட பல ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
தினமலர் ஒரு படி மேலே சென்று “ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சும் அமெரிக்கா” என செய்தி வெளியிட்டுள்ளது.
"PM Modi can convince President Putin" – USA
New India is the Global Leader.
— Amar Prasad Reddy (@amarprasadreddy) February 12, 2023
ஊடகங்கள் வெளியிட்ட இந்த செய்தியை பாஜகவின் விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி முதற்கொண்டு பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள ‘Briefing Room’-ல் அந்நாட்டு அரசு தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்படுவது வழக்கம். அச்சந்திப்பில் அரசின் நிகழ்வு, செயல்பாடுகள் குறித்துக் கூறப்படும். அதன்படி, 2023, பிப்ரவரி 10ம் தேதி அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி (John Kirby) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அச்செய்தியாளர் சந்திப்பு முழு வீடியோ ‘The White House’ என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் 47வது நிமிடத்துக்கு மேல் ரகுபீர் கோயல் (Raghubir Goyal) என்ற இந்தியப் பத்திரிக்கையாளர் ஜான் கிர்பியிடம் உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாகக் கேள்வி ஒன்றினை கேட்கிறார். +
‘ரஷ்யா-உக்ரைன் போர் ஒரு வருடமாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி போரை நிறுத்த ஏற்கனவே புதினிடம் வலியுறுத்தி இருக்கிறார். பிரதமர் மோடியால் போரை நிறுத்த காலம் கடந்து விட்டதாக நினைக்கிறீர்களா? மோடியால் புதினிடம் பேசி போரை நிறுத்த முடியுமா’ என்பதுதான் அக்கேள்வியின் சாரம்.
“போரை நிறுத்த புதினுக்கு இன்னும் நேரம் இருப்பதாக நினைக்கிறேன். போரை நிறுத்த புதினுக்கு இன்னும் நேரம் இருப்பதாக நினைக்கிறேன்” என இரண்டு முறை ஜான் கிர்பி கூறுகிறார். அப்போது செய்தியாளர் குறுக்கிட்டு, ‘மோடியால் புதினை சமாதானப்படுத்த முடியும் என நினைக்கிறீர்களா?’ என மீண்டும் கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு, ‘புதின் நினைத்தால் இப்போதே போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும். ஆனால், இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் அவரது நடவடிக்கைகள்தான். அவர் உக்ரைனில் இருக்கும் மின்சார உட்கட்டமைப்பினை திட்டமிட்டுத் தாக்கி வருகிறார். போரினால் அம்மக்கள் ஏற்கனவே பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் அம்மக்கள் கடும் குளிரினாலும் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர்.
அதுமட்டுமின்றி இப்போரைப் பற்றி எந்த உரையாடலாக இருப்பினும் உக்ரைனின் அனுமதியின்றி நாம் பேசுவது சரியாக இருக்காது” எனக் கூறியுள்ளார். இதில் எந்த ஒரு இடத்திலும் மோடியால் போரை நிறுத்த முடியும் எனக் கூறப்படவில்லை.
‘மோடியால் புதினை சமாதானப்படுத்த முடியுமா?’ எனச் செய்தியாளர் குறுக்கிட்டு கேள்வி கேட்ட போது மட்டுமே, மோடி என்ன முயற்சி வேண்டுமானாலும் எடுக்கட்டும், போரை நிறுத்தும் எந்த முயற்சியாக இருந்தாலும் அதனை கண்டிப்பாக நாங்கள் வரவேற்போம் என்றே கூறியுள்ளார்.
இதனைத் திரித்து, உக்ரைன் போரை நிறுத்த மோடியால் முடியும் என அமெரிக்க அரசு கூறியதாக இந்திய ஊடகங்களில் தவறாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த செய்தியாளர் சந்திப்பின் ‘ட்ரான்ஸ் ஸ்கிரிப்ட்’ வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. செய்தியாளர் குறுக்கிட்டுக் கேட்ட கேள்வியும், அதற்கு ஜான் கிர்பி அளித்த பதிலையும் எழுத்து வடிவில் படிக்கும் போது, மோடியால் மட்டுமே உக்ரைன் போரை நிறுத்த முடியும் என்றோ, மோடியால் மட்டுமே புதினை சமாதானப்படுத்த முடியும் என்றோ எங்கும் இடம்பெறவில்லை.
முடிவு :
நம் தேடலில், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி மோடியால் மட்டுமே ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த முடியும் எனக் கூறவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்திய ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.