This article is from Apr 15, 2019

மோடிக்கு வாக்கு கேட்ட முதியவர் அடித்துக் கொலையா ?

பரவிய செய்தி

பிஜேபி மோடிக்கு ஆதரவாக வாக்கு கேட்டதற்காக 75 வயதான முதியவரை திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆதரவாளர் தாக்கி கொலை செய்துள்ளனர் .

மதிப்பீடு

விளக்கம்

தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான முதியவர் கோவிந்தராஜ் மோடிக்கு ஆதரவாக வாக்கு  கேட்டு சென்ற போது திமுக ஆதரவாளர் தாக்கியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

ஒரத்தநாடு மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் தனியாக பிஜேபி-அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற முதியவர்  கோவிந்தராஜ் தன் கழுத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மோடி புகைப்படத்தை கட்டி தொங்க விட்டப்படி வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார் எனக் கூறுகின்றனர்.

இந்த செய்தி தமிழ், ஆங்கில இணைய செய்திகளிலும் கூட வெளியாகி உள்ளன. மேலும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை தன் ட்விட்டர் பக்கத்தில் முதியவரின் படத்தை பகிர்ந்து கண்டனம் தெரிவித்து இருந்தார்.

முதியவர் எப்படி இறந்தார் ? 

முதியவர் கோவிந்தராஜ் மரணம் அரசியல் சார்ந்த வன்மத்தை சமூக வலைதளங்களில் எழுப்பியது. இதற்கிடையில் முதியவரின் மரணம் குறித்து ஒரத்தநாடு டி.எஸ்.பி காமராஜர் The Quint-க்கு தெரிவித்த தகவலில்,

” முதியவர் கோவிந்தராஜ் ஏற்கனவே மனநலக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்து உள்ளார். மேலும், உரக்கமாக கத்தி பேசுவதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நேரத்திலும் கோவிந்தராஜ் தனக்கு தானே உரக்கமாக பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அருகில் இருந்த ஓட்டுனர் கோபிநாத் தன்னை தான் முதியவர் தவறாக பேசியதாக நினைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் தாக்குதலாக மாறி முதியவரை கீழே தள்ளி தாக்கியுள்ளார் கோபிநாத் ” எனத் தெரிவித்து உள்ளார்.

” முதியவர் தாக்கப்பட்ட உடனே இறக்கவில்லை. அன்று 3.00 மணியளவில் சம்பவம் நடந்த பிறகு முதியவர் கோவிந்தராஜ் வீட்டிற்கு சென்று இரவு உணவை உண்ட பிறகு 9 மணியளவில் இறந்துள்ளார் . முதியவரின் மரணத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஓட்டுனர் கோபிநாத் கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில் இருவருக்கும் எந்த கட்சியிலும் தொடர்பில்லை
” எனக் காவல்துறை தெரிவித்து உள்ளனர்.

இறந்த முதியவர் பாஜக கட்சியினரை சேர்ந்தவர் எனவும், குற்றம்சுமத்தப்பட்ட கோபிநாத் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆதரவாளர் எனவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. ஆனால், இதனை காவல்துறை மறுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பகுதியை சேர்ந்த பிஜேபி செயலர் இளங்கோ அளித்த பேட்டியில், ” முதியவர் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே 6 மாதங்களாக எங்கள் கட்சியில் இருந்துள்ளார். மேலும், பேரணிகளிலும் பங்கேற்றுள்ளார்.  தாக்கிய ஓட்டுனர் கோபிநாத் திக ஆதரவு பேரணியில் பங்கேற்றுள்ளார் ” எனக் கூறி இருந்தார்.

ஆனால், காவல்துறையின் தகவலில் சம்பவத்தில் தொடர்புடைய இருவருக்கும் எந்த அரசியல் கட்சிகளுடனும் தொடர்பில்லை என காவல்துறை தகவல் அளித்துள்ளது. Youturn தனிப்பட்ட முறையில் டி.எஸ்.பி காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். ஆனால், தேர்தல் பணிகள் என்பதால் தொடர்பு கொள்வதில் சிரமம் உள்ளது. தொடர்பு கொண்ட பிறகு விரிவான தகவலை அளிக்க உள்ளோம்.

Update : 

முதியவர் மரணம் தொடர்பாக ஒரத்தநாடு டி.எஸ்.பி.யிடம் தொடர்பு கொண்டு விரிவான தகவலை  அளிப்போம் எனக் கூறி இருந்தோம். இன்று(21-4-19) டி.எஸ்.பி காமராஜர் அவர்களை Youturn தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசியதில் கிடைத்த ஆதாரத்தை அளித்து உள்ளோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader