பிரதமர் மோடியை வரவேற்க போக்குவரத்து காவலர்களுக்கு காவி நிறக் குடையை அரசு வழங்கியதா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவதை வரவேற்கும் வகையில் தமிழக போக்குவரத்து காவலர்களுக்கு காவி குடை தமிழக அரசால் வழங்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவலர்கள் குடை உடன் வரிசையாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோடி வருவதை வரவேற்கும் விதமா போக்குவரத்து காவலர்களுக்கு காவி குடை !!
கறுப்பு கொடி டூ காவி குடை…🤭😂😂😂 pic.twitter.com/RFxvuNyQFI
— Vinothkumar G Kshatriyan (@vino_gv) May 25, 2022
போக்குவரத்துக்கு காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடை.
குடை கருப்பு நிறத்தில் இருக்கும், இல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும் இது என்ன காவி கலர்.
சமீப காலமாக அரசின் செயல்பாடுகள் கொஞ்சம் கூட சரி இல்ல இப்படியே போனா அடுத்த 10 வருசம் இல்ல எந்த ஜென்மத்திலும் @arivalayam ஆட்சிக்கு வராது. pic.twitter.com/9KmFK8OH0k
— Zahur (@Zahurbhai) May 22, 2022
” மோடி வருவதை வரவேற்கும் விதமாக போக்குவரத்து காவலர்களுக்கு காவி குடை! ” என அதிமுகவின் காஞ்சிபுர மாவட்ட ஐடி-விங் மாவட்ட செயலாளர் சதீஷ் சங்கர் இப்படத்தை பதிவிட்டு உள்ளார். மேலும், பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சி ஆதரவாளர்களும் காவலர்கள் காவி நிறக் குடையுடன் இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
தமிழக காவலர்கள் கையில் குடையுடன் இருக்கும் புகைப்படங்கள் ஆவடியின் கமிஷனர் அலுவலகத்தின் முன்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அதுதொடர்பான பதிவுகள் ஆவடியின் கமிஷனர் மற்றும் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இடம்பெறவில்லை.
இந்த குடைகளை போக்குவரத்து காவலர்களுக்கு அமைப்பு ஒன்று நன்கொடையாக வழங்கி இருப்பது போன்று குடையில் எழுத்துக்கள், லோகோக்கள் இருப்பதை பார்க்க முடிந்தது.
ஆகையால், வைரல் செய்யப்படும் புகைப்படங்கள் குறித்து தேடுகையில், மே 22-ம் தேதி ஆவடி கமிஷனர் சந்தீப் ரதோரைக் குறிப்பிட்டு போக்குவரத்துக் காவலர்கள் குடையுடன் இருக்கும் புகைப்படங்களை விமர்சித்து பியுஷ் மனுஷ் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
மேற்காணும் புகைப்படங்களில் பார்க்கையில், குடையில் ” Tirumala tmt ” மற்றும் ” Rotary club ” உள்ளிட்டவையின் பெயர் மற்றும் லோகோ இடம்பெற்று இருப்பதை பார்க்க முடிந்தது. அனைத்து குடைகளிலும் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ இடம்பெற்று உள்ளது.
இதுகுறித்து தேடுகையில், சென்னை கீழ்பாக்கத்தில் புதிய ஆவடி சாலையில் அமைந்துள்ள Prakash Ferrous Industries Pvt. LTD – PFI Tirumala எனும் ஸ்டீல் நிறுவனத்தின் லோகோ என அறிய முடிந்தது. அந்நிறுவனம் பயன்படுத்தும் நிறத்தில் போக்குவரத்துக் காவலர்களுக்கு நன்கொடையாக குடை வழங்கி உள்ளார்கள்.
வைரலான புகைப்படங்கள் குறித்து ஆவடி காவல்துறை சரகத்தில் விசாரித்த போது ,” இது ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் 10 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இவை நன்கொடையாக வழங்கப்பட்டது. ஆனால், குடையின் நிறம் சர்ச்சையை ஏற்படுத்திய உடன் குடைகளை பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. அந்த பதிவையுமே கமிஷனர் நீக்கி இருக்கிறார் ” எனத் தெரிவித்தனர்.
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடி வருவதை வரவேற்கும் விதமாக போக்குவரத்து காவலர்களுக்கு காவி நிறக் குடையை தமிழக அரசு வழங்கி உள்ளதாக பரவும் தகவல் தவறானது. வைரலாகும் புகைப்படங்கள் ஆவடி பகுதியில் போக்குவரத்து காவலர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட குடை என அறிய முடிகிறது.