துருக்கி அரசு பிரதமர் மோடிக்கு தபால்தலை வெளியிட்டதா ?

பரவிய செய்தி
பெருமைப்படும் தருணம்! இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால்தலை வெளியிட்டு, இந்நேரத்தில் உலகின் சிறந்த தலைவருக்கு மரியாதை செலுத்துவதாக அறிவித்துள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
துருக்கியில் G20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்களை சிறப்பிக்க அந்நாடு தபால்தலைகளை வெளியிட்டனர்.
விளக்கம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு துருக்கி நாட்டில் தபால்தலை வெளியிட்டு உள்ளதாகவும், இதனைக் கண்டு இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டதை காண முடிந்தது.
இதே போன்று, அஸ்ஸாம் மாநில பிஜேபியின் ட்விட்டர் பக்கத்திலும், ” இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால்தலை வெளியிட்டு உள்ளனர். இது உலகின் தலைச் சிறந்த தலைவர்களில் ஒருவரான நம் பிரதமருக்கு கிடைத்த மரியாதை ” என 2018 டிசம்பர்-ல் பதிவிட்டு இருந்தனர்.
2015 நவம்பர் 15-ம் தேதி துருக்கியின் G20 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள உலக நாடுகளின் பிரதிநிதிகளாக அந்நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். G20 மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களின் உருவம் பொறித்த தபால்தலையை எர்டோகன் வழங்கினார்.
பிரதமர் மோடிக்கு துருக்கி நாட்டில் தபால்தலை வெளியிட்டது உண்மை என்றாலும், அவருக்காக மட்டும் வெளியிடவில்லை. இந்திய பிரதமர் உடன் சேர்த்து அமெரிக்க, கனடா, ரஷ்யா உள்ளிட்ட தலைவர்களையும் உள்ளடக்கிய 33 தபால்தலையை வெளியிட்டனர்.
மேலும், சில பதிவுகளில் கூறுவது போன்று உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் என பிரதமர் மோடியை எங்கும் குறிப்பிடவில்லை. துருக்கி பணமதிப்பில் 2.80 லிரா வுடன், பிரதமர் மோடியின் படம், இந்திய கொடி, இந்திய குடியரசின் பிரதமர் ஆகியவை அந்த தபால்தலையில் இடம்பிடித்துள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.