ட்விட்டரில் 60% Fake Followers கொண்ட பிரதமர் மோடி.

பரவிய செய்தி
ட்விட்டரில் அதிக Fake Followers கொண்ட உலகத் தலைவர்களின் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 60% போலியான ஃபாலோயர்களை பெற்று முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதிப்பீடு
சுருக்கம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் கணக்கை பின் தொடர்பவர்களில் 60.5% பேர் போலியான ஃபாலோயர்கள் என்று Twitter Audit மூலம் தெரியவந்துள்ளது.
விளக்கம்
இந்தியாவில் ட்விட்டர், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ள போலியான கணக்குகள் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆம், குறிப்பாக பிரபலங்களின் பக்கங்களை பின் தொடர்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் போலியான வலைத்தள கணக்குகளை கொண்டவர்கள் ஆவர்.
சமூக வலைத்தளத்தில் உலகத் தலைவர்களின் செயல்பாட்டை பற்றி ஆய்வை நடத்தும் Burson Marsteller எனும் உலகின் முன்னணி பொதுத் தொடர்பு நிறுவனத்தின் Twiplomacy சமீபத்தில் Twitteraudit.com மூலம் ட்விட்டர் கணக்கில் போலியான ஃபாலோயர்கள் கொண்ட உலகத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது.
இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi @narendramodi) ட்விட்டர் பக்கத்தின் ஃபாலோயர்களில் 60% பேர் போலியான ஃபாலோயர்ஸ் என்ற தகவல் Twitter Audit மூலம் வெளிவந்துள்ளது.
2012 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட Twitter Audit-ல் ஒருவருடைய ட்விட்டர் கணக்கில் வரிசையற்ற முறையில் எடுக்கப்பட்ட 5000 ஃபாலோயர்களின் கணக்குகளை தணிக்கை செய்து, ஒவ்வொருவரையும் பொறுத்து மதிப்பெண் வழங்குகிறது. இந்த மதிப்பெண், ஃபாலோயர்களின் ட்விட், இறுதியாக ட்விட் செய்த தேதி, அவர்களின் ஃபாலோயர் விகிதம் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த மதிப்பெண்ணை வைத்தே உண்மையான மற்றும் போலியான ஃபாலோயர்களின் சதவீதத்தை வெளியிடுகிறது.
Twitter Audit அமெரிக்காவை சேர்ந்தது மற்றும் இது ட்விட்டர் உடன் இணைந்தவை அல்ல. Twitter Audit-ல் பச்சை நிற கைவிரல் அதிகளவில் உண்மையான ஃபாலோயர்களை கொண்டுள்ளதையும், ஆரஞ்சு நிற கைவிரல் சரியாக தீர்மானிக்க முடியவில்லை என்பதையும், சிவப்பு நிற கைவிரல் அதிக போலியான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதையும் குறிக்கிறது.
பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை பின் தொடரும் மொத்த ஃபாலோயர்களில் 15,802,431 பேர் மட்டுமே உண்மையான கணக்குகளை கொண்ட ஃபாலோயர்கள் ஆவர். மீதமுள்ள 24,203,723 பேர் போலியான ஃபாலோயர்கள் என்று Twitter Audit-ல் தெரியவந்துள்ளது. ஆக, பிரதமர் மோடியை பின் தொடர்பவர்களில் 60.5% பேர் போலியான ஃபாலோயர்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.
இந்திய பிரதமரின் ட்விட்டர் கணக்கில் மட்டுமே போலியான ஃபாலோயர்கள் இருப்பதாக நினைத்து விடக் கூடாது. 2017-ல் வெளியான தகவலின்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2,093,891 போலியான ஃபாலோயர்களும், பாரக் ஒபாமாக்கு 17,797,058 மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு 19,328,513 போலியான ஃபாலோயர்களும் உள்ளனர்.
2017-ல் Twitter Audit மூலம் இந்தியாவில் குறிப்பிட்ட 12 பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் மட்டுமே தணிக்கை செய்யப்பட்டன. அதில் இந்திய பிரதமரின் தனிப்பட்ட கணக்கு மற்றும் பிரதமர் அலுவலகத்தின் கணக்கு என்று இரண்டு கணக்குகளிலும் அதிகளவில் போலியான ஃபாலோயர்களே உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை விட இந்திய பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கில் அதிகளவில் போலியான ஃபாலோயர்கள் இருப்பதை Twitter Audit மூலம் தீர்மானித்துள்ளதை TWIPLOMACY அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், சந்தேகத்திற்குரிய இத்தகைய அறிக்கை குறித்து எங்களால் பதில் அளிக்க முடியாது. இந்த அறிக்கை ட்விட்டரின் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. எனினும், அதிகளவில் போலியான ஃபாலோயர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.