பிரதமர் மோடியின் ஆட்சியால் அமெரிக்கர்கள் இந்தியாவில் வேலை கேட்கின்றனர் என என்ஆர்ஐ ஒருவர் கூறியதாகப் பரவும் நையாண்டிப் பதிவு !

பரவிய செய்தி
சங்கிகளின் உலகம்! அமெரிக்காக்காரங்களே இந்தியாவுக்கு வந்து வேலை செய்ய ஆசைப்படறாங்களாம்… என்னடா இது.. இந்த அமெரிக்காவுக்கு வந்த சோதனை??
மதிப்பீடு
விளக்கம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். வருகிற 22ம் தேதி அவர்களின் சார்பில் மோடிக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. மேலும் அன்றைய தினத்தில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் புகைப்படங்கள் உள்ள ஒரு பேனருக்கு முன்னாள் ஒரு பெண்மணி ANI செய்தி சேனலின் மைக்குடன் இருப்பது போன்ற புகைப்படம் அன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அமெரிக்காகாரன் இந்தியாவுல வேலை கேட்டானாம்… எங்க இந்தமாமாவ இங்க வர சொல்லலாமே 😂😂
விஷ சங்கி சனியனுங்க https://t.co/ixDv0JnSAe pic.twitter.com/EFXKq8WBPP— மிருதுளா (@mrithulaM) June 20, 2023
அப்பதிவுகளில், அமெரிக்க விஸ்கான்சினில் (Wisconsin) உள்ள ஸ்மிதா பென் படேல் என்ற NRI பெண், “பிரதமர் மோடியின் வருகையால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், பிரதமர் மோடி இந்தியாவை உலகிலேயே நம்பர் 1 ஆக மாற்றியுள்ளார். இன்று எனது அமெரிக்க அண்டை வீட்டார் தங்களுக்கு இந்தியாவில் வேலை தேடித் தருமாறு கேட்கிறார்கள்” எனக் கூறியதாகப் பரப்பப்பட்டு வருகிறது.
“ We are very happy with PM Modi’s visit, PM Modi made India number 1 in the world, today even my American neighbours ask me to find them jobs in India” said NRI Smita Ben PateI in Wisconsin ahead of PM Modi’s state visit to the United States. pic.twitter.com/fQQfOxqKW4
— JayKay (@JayKay074) June 20, 2023
உண்மை என்ன ?
பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்துப் பேசியதாகப் பரவும் பெண்ணின் படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடுகையில், அப்படம் 2014ம் ஆண்டு, அக்டோபர் 25ம் தேதி ANI செய்தி சேனலின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
Smita Prakash,Editor,News(ANI): It was said BJP’s media interaction was always a one-way process 1/2 pic.twitter.com/zxJEaRiNhU
— ANI (@ANI) October 25, 2014
அப்படத்தில் இருப்பது ANI ஆசிரியர் (Editor) ஸ்மிதா பிரகாஷ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து ஸ்மிதா பிரகாஷ் ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என இணையத்தில் தேடினோம். அப்படி எந்த செய்திகளும் வெளியாகவில்லை.
மேற்கொண்டு பரவிய செய்தியை முதலில் டிவிட்டரில் பதிவிட்டிருந்த ரோஷன் ராய் என்பவரது டிவிட்டர் பயோவினை பார்க்கையில் அதில் ‘Natural love for humour’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது பதிவின் கமெண்டில் “மோடியின் வருகையால் யாரோ ஒருவர் மகிழ்ச்சியடைந்ததில் நானும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மோசமான நிலையில் உள்ளது. உங்களது அண்டை வீட்டார் இந்தியாவில் வேலை வேண்டும் என்கிறார் எனில் உங்களது நாட்டின் நிலை அதை விட மோசமாக இருப்பதாகத் தோன்றுகிறது” என ‘TruthGPTBot’ என்னும் ஐடியில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ரோஷன் ராய் ‘இந்த Bot இந்தியாவிற்கு எதிராக சொரெஸ் செய்த சதி. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரப் பிரதேஷ் காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
ரோஷன் ராயின் பதிவுகளைக் கொண்டு பார்க்கையில், ஸ்மிதா பிரகாஷின் பெயரை ஸ்மிதா பென் படேல் என மாற்றி நையாண்டியாகச் செய்த பதிவை, பலரும் உண்மை எனப் பகிர்ந்துள்ளது தெரியவருகிறது.
மேலும் படிக்க : சோழ இளவரசி குந்தவையின் அரிய புகைப்படம் எனப் பரவும் நையாண்டிப் பதிவு !
மேலும் படிக்க : கேரளாவில் சன்னி லியோனுக்கு திரண்ட கூட்டத்தை மோடி ஆதரவாளர்கள் எனப் பரப்பிய நையாண்டிப் பக்கம் !
முடிவு :
நம் தேடலில், அமெரிக்காவில் உள்ள NRI பெண்ணான ஸ்மிதா பென் படேலிடம் அவரது அண்டை வீட்டார் இந்தியாவில் வேலை தேடித் தருமாறு கோரியதாகப் பரவும் செய்தி உண்மை அல்ல. நையாண்டியானப் பதிவினை பலரும் உண்மை எனப் பகிர்ந்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.