மோடி, ஜின்பிங் கார்ட்டூன் வீடியோ ஜப்பான் டிவி-யில் ஒளிபரப்பாகியதா ?

பரவிய செய்தி
ஜப்பானிய டிவிக்களில் தற்போது ஒளிபரப்பப்படும் இந்தியாவை பற்றிய கார்ட்டூன் வீடியோ..!
மதிப்பீடு
விளக்கம்
இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்-ஐ வைத்து உருவாக்கப்பட்ட கார்ட்டூன் வீடியோ ஜப்பான் நாட்டின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதா இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வீடியோவில் பிற மொழியில் எழுத்துக்கள் பெரிதாக இடம்பெற்று உள்ளதால் அந்நாட்டின் தொலைக்காட்சியில் வெளியான கார்ட்டூன் வீடியோ என பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், வீடியோவின் மேலே வலது ஓரத்தில் இந்தி மொழியில் ஒரு லோகோ இருப்பதை காணலாம்.
மோடி, ஜின்பிங் கார்ட்டூன் வீடியோவை இந்தியா டுடேவின் குழுவைச் சேர்ந்த Sosorry எனும் நிகழ்ச்சி மூலம் கடந்த ஜூன் 27-ம் தேதி ஒளிபரப்பி உள்ளார்கள். 2.08 நிமிடம் கொண்ட முழு வீடியோவில் சீன அதிபர் ஜின்பிங் பயிற்சி எடுப்பது போலவும், மோடியுடன் சண்டையிடுவது போலவும் சித்தரித்து உள்ளார்கள். இந்த வீடியோவில் Aaj Tak எனும் லோகோ இந்தியில் இடம்பெற்று இருக்கிறது. Aaj Tak இந்தி சேனலே தவிர ஜப்பான் நாட்டின் சேனல் அல்ல. முழு வீடியோவை கீழே காணலாம்.
உண்மையான வீடியோவில் ஜப்பான் நாட்டின் மொழியில் எழுத்துக்கள் ஏதும் இல்லை. Sosorry யூடியூப் சேனலில் வெளியான வீடியோவை ஜப்பான் மொழியில் உள்ள யூடியூப் சேனலில் வெளியிட்டு உள்ளார்கள். அதில் , ஜப்பான் மொழியில் உள்ள எழுத்துக்கள் வருகின்றன. அந்த வீடியோவை எடுத்தே இந்திய சமூக வலைதளங்களில் ஜப்பான் நாட்டின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் வீடியோ என வைரல் செய்கிறார்கள். அது இந்திய தொலைக்காட்சியில் வெளியான வீடியோ என்பதே உண்மை.
இதற்கு முன்பாகவும், இந்திய டுடே தரப்பில் அரசியல் சார்ந்து பல கார்ட்டூன் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, மோடி மற்றும் ஜின்பிங் மோதுவது போன்றும் சித்தரித்த வீடியோ வைரலாகியது.
முடிவு :
நமது தேடலில், ஜப்பானிய டிவிக்களில் தற்போது ஒளிபரப்பப்படும் இந்தியாவை பற்றிய கார்ட்டூன் வீடியோ என வைரல் செய்யப்படும் வீடியோ இந்தியாவில் வெளியானதே, ஜப்பானில் வெளியானது அல்ல எனத் தெரிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.