மொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா ?

பரவிய செய்தி
ஐபிஎல் போட்டியில், ” தான் அணியும் ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொல்லிய மொயின் அலியின் கோரிக்கையை சி.எஸ்.கே நிர்வாகம் ஏற்றது !
மதிப்பீடு
விளக்கம்
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அதீத வரவேற்புடன் நேற்று தொடங்கிய நிலையில் கடந்த ஒரு வாரமாக கவனிக்கத்தக்க செய்தி ஒன்று சமூக வலைதளங்களிலும், தமிழ் முன்னணி செய்தி ஊடகங்களிலும் பேசப்பட்டு வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான மொயின் அலி தன்னுடைய ஜெர்சியில் இருக்கும் மதுபான தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பரத்தை நீக்குமாறு சிஎஸ்கே நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களில் வரும் மீம்களைத் தாண்டி பல முன்னணி செய்தி நிறுவனங்களும் இது குறித்து செய்திகள் வெளியிட்டன.
இன்னும் ஒரு படி மேலே சென்று, இந்த செய்தி அரசியல் ஆக்கப்பட்டது. அந்த மதுபான நிறுவனம் தமிழகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினுடையது என்றும், அந்த கட்சி தான் வலுக்கட்டாயமாக அந்த விளம்பரத்தை வீரர்களின் உடையில் திணிக்கிறது என்பது போன்ற மீம்கள் பகிரப்பட்டது.
உண்மை என்ன ?
இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் பல கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விளையாட்டு உடைகளில் இருந்து மதுபானங்களை ஊக்குவிப்பது போன்ற விளம்பரங்களை நீக்கிய நிகழ்வுகள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹாசிம் அம்லா, இம்ரான் தாஹிர் மற்றும் பல பாகிஸ்தான் வீரர்கள் மதுபான விளம்பரங்களை தங்கள் உடையில் இருந்து நீக்கி உள்ளனர்.
இதைபோல், மொயின் அலியும் விளம்பரங்களை நீக்க சொன்னதாகவும், அதற்கு சிஎஸ்கே நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வந்தன. ஆனால், இப்படி பரவும் தகவலை சிஎஸ்கே நிர்வாகம் மறுத்து உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ” விளம்பர லோகோவை அகற்றுமாறு மொயின் அலி சிஎஸ்கேவிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை ” எனத் தெரிவித்தார்.