டெல்லி போராட்டத்தில், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோவா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் யார் யார் என்று ஒருவன் காட்ட மற்றொருவன் அவர்ளுக்கு பணம் கொடுக்கிறான்.!! 40 உயிர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான கூலி வழங்கும் காட்சி.
மதிப்பீடு
விளக்கம்
டெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் நடத்தப்பட்ட சிஏஏ எதிர்ப்பு போராட்டம் முதல் டெல்லி கலவரம் வரையில் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. அவற்றில் பல வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டவை.
டெல்லி ஷாகின்பாக் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள முஸ்லீம் பெண்களை பணம் கொடுத்து அழைத்து செல்வதாக கூறி இந்த வீடியோ இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டது. வீடியோவில் குறுகிய தெருவில் வரிசையில் நிற்கும் பெண்களுக்கு ஆண்கள் சிலர் பணம் கொடுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதே வீடியோவை பகிர்ந்து, டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லீம்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என பரப்பி வருகிறார்கள்.
டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ள மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என இரு செய்திக்கு ஒரே வீடியோவை வைத்து பரப்பி உள்ளனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. எனினும், சரியான ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் வெளியிட தயாராக இருந்தோம். இந்நிலையில்தான், வைரலான வீடியோ குறித்து கள தரவுகள் கிடைத்தன.
உண்மை என்ன ?
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர மோகன் என்பவர் சமூக வலைதளத்தில் வைரலான இடத்திற்கே சென்று அங்கு நிகழ்ந்தது என்ன என்பதை விளக்கி தன் முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில், ” டெல்லி பழைய முஸ்தஃபாபாத்தில் உள்ள பாபு நகரின் கலி நம்பர் 9, பிளாக் ஏ பகுதியே பிப்ரவரி 28-ம் தேதி எடுக்கப்பட்ட வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. சிவ் விஹார் பகுதியில் தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர். சிவ் விஹார் பகுதியில் இருந்து வந்த மக்களுக்காக பாபு நகரில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் தங்க அனுமதித்து உள்ளனர் எனத் தெரிவித்து உள்ளார்.
தொடர்ச்சியாக ஷாசாத் மாலிக் என்பவரை அறிமுகம் செய்துள்ளார். பணத்தை விநியோகம் செய்த வீடியோவில் நீங்கள் பார்த்தவர்களில் இவரும் ஒருவர். நாங்கள் உங்களுக்கு நடந்த உண்மை என்னவென்று கூறுவதற்காக அதே உடையில் வர வேண்டும் என மாலிக்கிடம் கேட்டுக் கொண்டோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் பொருட்களை மாலிக் வழங்கி உள்ளார், ஆனால் ரேஷன் பொருட்களை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்துள்ளது. இவருக்கு நல்ல உள்ளம், இவர் தன்னுடைய சொந்தப் பணத்தில் 70,000 ரூபாயை மக்களுக்கு வழங்கி உள்ளார். ஒவ்வொரு நபருக்கும் 500 ரூபாய் வழங்கி உள்ளார்.. இங்கு உண்மைகள் பேசப்படுவதில்லை.. பொய்களையே பரப்புகிறார்கள் ” என கூறி இருந்தார்.
சந்திர மோகன் வெளியிட்ட வீடியோவின் தொடக்கத்திலேயே வைரலான வீடியோவில் காணப்பட்ட அடையாளங்களை காணலாம். இரண்டு வீடியோவிலும் இருக்கும் அடையாளங்களை குறியீட்டு காண்பித்து இருக்கிறோம். வைரலான வீடியோ எடுக்கப்பட்ட பகுதியில் இருந்தே அவர் பேசி இருக்கிறார் என்பதை தெளிவாய் புரிந்து கொள்ள முடிகிறது.
மேற்கொண்டு சந்திர மோகன் தன் வீடியோவில், மக்களுக்கு பணம் கொடுத்து வந்த ஷாசாத் மாலிக் உடன் உண்மையான நிவாரண பணியின் வீடியோவையும் இணைத்து உள்ளார். மாடியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், வாகனத்தில் இருந்து நிவாரண பொருட்கள் கொண்டு செல்வது, மக்கள் கூட்டமாய் நிற்பது உள்ளிட்டவை பதிவாகி இருக்கிறது. மேலும், வைரல் வீடியோவில் இருக்கும் பெண்களின் நீண்ட வரிசையையும் காண முடிந்தது. அந்த வீடியோவில் 4.55 நிமிடத்தில் பெண் ஒருவர் ஷாசாத் உடைய பெயரை குறிப்பிட்டு பேசும் ஆடியோ பதிவாகி இருக்கிறது.
இது தொடர்பாக சந்திர மோகன் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” பிப்ரவரி 26-ம் தேதி டெல்லியில் நிவாரண பணிகளுக்காக சென்றிருந்தேன். வைரலான வீடியோவில் இருக்கும் பகுதி போராட்டம் நிகழ்ந்த ஷாகின்பாக் இல்லை, ஓல்ட் முஸ்தஃபாபாத் பகுதியே அது. சிவ் விஹார் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த பகுதியில் தங்கி இருந்தார்கள். பிப்ரவரி 28-ம் தேதி பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால், 100-150 பெண்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை. அதைப் பார்த்த ஷாசாத் என்பவர் தன் வீட்டில் இருந்த 70,000 ரூபாய் பணத்தை எடுத்து வந்து ரேஷன் கிடைக்காதவர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். அங்கு நிகழ்ந்த நீண்ட சம்பவத்தை வீடியோ எடுத்தது ஷாசாத் மாலிக் உடைய மனைவியே. ஆனால், அந்த வீடியோவில் சிறு பகுதியை மட்டும் கட் செய்து போராட்டத்திற்கு பணம் கொடுப்பதாக வதந்திகளை பரப்பி இருக்கிறார்கள் ” எனத் தெரிவித்தார்.
மார்ச் 1-ம் தேதி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளியான செய்தியில், டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு, ரேஷன் பொருட்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் என புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருக்கிறது. டெல்லி வன்முறையால் பல குடும்பங்கள் தங்களின் வசிப்பிடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். மேலும், தங்கள் வீடுகள், உடைமைகள் சேதமடைந்ததால் ரேஷன் பொருட்களை மக்கள் காத்திருந்து வாங்கிச் சென்றுள்ளனர்.
அவ்வாறான சம்பவமே டெல்லியில் பழைய முஸ்தஃபாபாத் பகுதியிலும் நடைபெற்று இருக்கிறது. டெல்லியில் சிஏஏ-க்கு எதிரான போராட்டம் நிகழ்ந்த பகுதியான ஷாகின்பாக் பகுதிக்கும், முஸ்தஃபாபாத் பகுதிக்கும் இடையே உள்ள தொலைவு 30கி.மீ. இரு பகுதியும் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான பயண நேரத்தைக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க : சிஏஏ-க்கு எதிரான கூட்டத்திற்கு பணம் வழங்குவதாக பரவும் வீடியோ ?| உண்மை என்ன ?
நிவாரண பொருட்கள் கிடைக்காத மக்களுக்கு ஷாசாத் மாலிக் தன்னுடைய பணத்தை வழங்கி உதவி செய்த காரியத்தை வீடியோ எடுத்து உள்ளனர். ஆனால், அந்த வீடியோவில் பணம் கொடுக்கும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்து தவறான தகவலுடன் இந்திய அளவில் பரப்பி உள்ளார்கள் என்பதை அறியலாம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.