பிரதமர் மோடியுடன் இருப்பது மோர்பி தொங்கு பாலத்தின் ஒப்பந்தத்தை எடுத்த ஒரேவா நிறுவனத்தின் அதிபரா ?

பரவிய செய்தி

குஜராத் தொங்கு பாலம் இடிந்த விவகாரம் இவர்தான் ஒரோவா நிறுவனத்தின் அதிபர் ஓதவ் பட்டேல். கொசுக்களை கொல்லும் கருவிகள் தயாரிக்கும் இவருக்கு, தொங்கு பாலம் கட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

குஜராத் மாநிலத்தின் மோர்பியில் பராமரிப்பு பணிகள் முடிந்து திறக்கப்பட்ட தொங்கு பாலம் சில நாட்களிலேயே உடைந்து விழுந்து 140க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. மோர்பி பாலம் சம்பவத்தால் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில், மோர்பியின் தொங்கு பாலத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை எடுத்த ஒரேவா நிறுவனத்தின் உரிமையாளர் ஓதவ் பட்டேல் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருப்பதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் திமுக மற்றும் காங்கிரஸ்காரர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

குஜராத்தின் மோர்பி பாலத்தை 15 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்தத்தை மோர்பி மாநகராட்சி நிர்வாகம் ஒரேவா எனும் சுவர் கடிகாரம் மற்றும் பல்புகள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு கடந்த மார்ச் மாதம் வழங்கியது. இதற்காக ரூ.2 கோடியில் புணரமைப்பு பணிகளை மேற்கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது. ஆனால், மாநகராட்சியின் உறுதிச் சான்றிதழ் இல்லாமலேயே அக்டோபர் 26ம் தேதி குஜராத் புத்தாண்டு தினத்தில் தொங்கு பாலம் திறக்கப்பட்டது.

Facebook link 

ஒரேவா நிறுவனத்தை ஓதவ்ஜி ராகவ்ஜி படேல் என்பவர் நிறுவியுள்ளார். 2020ம் ஆண்டு ” Oreva Calculators ” எனும் முகநூல் பக்கத்தில் ஓதவ்ஜி ராகவ்ஜி படேல் உடைய பிறந்தநாள் தினத்தில் அவரது புகைப்படம் பதிவிடப்பட்டு உள்ளது. ஆனால், இவர் 2012ம் ஆண்டு உயிரிழந்ததாக லைவ் மின்ட் இணையதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.

பிரதமர் மோடியுடன் இருக்கும் நபரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அதே புகைப்படம் குஜராத் அரசின் வேளாண் மற்றும் கால்நடை அமைச்சர் ராகவ்ஜி படேல் ட்விட்டர் பக்கத்தில் முகப்பு படமாக உள்ளது.

2021 அக்டோபர் மாதம் குஜராத் வேளாண் அமைச்சர் ராகவ்ஜி படேல் பிரதமர் மோடியை சந்தித்ததாக இப்புகைப்படங்கள் Patrika எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

ஒரேவா நிறுவனத்தின் நிறுவனர் ஓதவ்ஜி ராகவ்ஜி படேல் என குஜராத் வேளாண் அமைச்சர் ராகவ்ஜி படேல் பிரதமருடன் இருக்கும் புகைப்படம் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது. 

முடிவு : 

நம் தேடலில், பிரதமர் மோடியுடன் ஒரோவா நிறுவனத்தின் அதிபர் ஓதவ் பட்டேல் இருப்பதாகப் பரப்பப்படும் புகைப்படம் தவறானது. அந்த புகைப்படத்தில் இருப்பது குஜராத் வேளாண் அமைச்சர் ராகவ்ஜி படேல் என அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader