பழைய சோறு 250 ரூபாய்க்கு விற்பனையா ?

பரவிய செய்தி
பழைய சோறு பாட்டில்களில் அடைக்கப்பட்டு 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நம் பழைய சோறு கூட இப்போது கார்ப்ரேட் கையில் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மதிப்பீடு
சுருக்கம்
கொரியா நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த “ Morning Rice Drink “ ஆல் சிலருக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக முழுவதுமாக மாற்றம் பெற்று விற்பனைக்கு வந்துள்ளது. இவை இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை.
விளக்கம்
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட படங்கள் என்றால் பழைய சோறு என்றுக் கூறி காண்பிக்கப்பட்ட இப்படங்களே. பழைய சோற்றை பாட்டில்களில் அடைத்து 250 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறி அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், இவை நாம் உண்ணும் பழைய சோறு இல்லை என்பதே உண்மை.
கொரிய நாட்டில் உள்ள Woongjin foods co.ltd என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்படும் “ Morning Rice Drink “ என்ற ஒரு வகை உண்ணும் பானங்கள் தான் இவை. இந்த “ Morning Rice Drink “ பானத்தில், அரிசி சாறு (45%) , பழுப்பு அரிசி சாறு (33%), சுத்திகரிக்கப்பட்ட நீர், வெள்ளை சர்க்கரை, காய்கறிகளின் கிரீம், கிழங்கு சாறு, பழுப்பு அரிசி சுவை, எண்ணெய் பொருட்கள், சுவையூட்டும் பொருட்கள் என பல மூலப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பானம் கொரியா நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு நியூசிலாந்து போன்ற நாடுகளில் விற்பனை செயப்படுகிறது.
ஜூலை 2016-ம் ஆண்டில் கனடா நாட்டை சேர்ந்த உணவு ஆய்வு நிறுவனம் Woongjin Morning rice drink என்ற அரிசி சுவையுடைய பானத்தில் பால் பொருட்கள் இருப்பது பற்றி எந்த குறியீடும் அதில் இல்லை என்று கூறியுள்ளது. மேலும், பால் பொருட்கள் ஒவ்வாமை உள்ளவர்கள் யாரும் இதை வாங்கி அருந்த வேண்டும் என்று எச்சரித்துள்ளது. எனவே, கடைகளில் உள்ள Morning rice drink பானங்களை திருப்பி அளிக்குமாறு அறிவுரை வழங்கினர்.
இதையடுத்து, Woongjin அந்த பானத்தின் வடிவமைப்பு மற்றும் லேபில் உள்ளிட்டவற்றை முழுவதுமாக மாற்றியதோடு பால் ஒவ்வாமை உடையவர்கள் அருந்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த பானத்தை பற்றி அறியாமல் சிலர் தவறாக புரிந்துக் கொண்டு, நாம் உண்ணும் பழைய சோற்றை விற்பனை செய்வதாக எண்ணி படங்களை பகிருந்ததால் வைரலாகி உள்ளது. எனவே, இவை நாம் உண்ணும் பழைய சோறு இல்லை என்பதை அனைவரிடத்திலும் தெளிவுப்படுத்துங்கள்.