பின்லாந்தில் இறந்த கொசு மூலம் திருடனைப் போலீஸ் பிடித்த சம்பவம்.

பரவிய செய்தி
2008-ல் பின்லாந்து போலீசார் திருடப்பட்ட கார் ஒன்றை மீட்டபோது, அதனுள்ளே ஒரு இறந்த கொசுவைக் கண்டனர். பிறகு, அது கடைசியாக குடித்த இரத்தத்தின் DNA வைதடயமாகக் கொண்டு, திருடனைக் கண்டுபிடித்துவிட்டனர்.
மதிப்பீடு
விளக்கம்
பின்லாந்து நாட்டின் போலீசார் இறந்த கொசுவின் மூலம் கார் திருடனைக் கண்டறிந்ததாக மீம் பதிவு ஒன்றை யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் அனுப்பப்பட்டு இருந்தது. நம்பமுடியாத வகையில் இருந்த தகவல் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் தேடிப் பார்க்கையில் 2008-ல் வெளியான செய்திகள் பல கிடைத்தன.
2008-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி பிபிசி ஐரோப்பியன் பிரிவில் வெளியான செய்தியில், ” பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கியின் வடக்கே உள்ள சீனோஜோகியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த காரை பின்லாந்து போலீசார் கண்டறிந்தனர். கைவிடப்பட்ட வாகனத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட இறந்த கொசுவால் இறுதியாக உறிஞ்சப்பட்ட இரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரியை ஆய்வுக்கு அனுப்ப முடிவு எடுத்தனர். ஆய்வக சோதனைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட டி.என்.ஏ-வை போலீஸ் பதிவேட்டில் இருந்த நபர்களுடன் ஒப்பிட்டு கார் திருடனைப் பிடித்ததாக பின்லாந்து போலீசார் நம்புகின்றனர்.
ஆனால், கைது செய்யப்பட்ட நபர் திருடியதை மறுத்ததோடு, அவர் காரை ஓட்டி வந்த நபரிடம் லிப்ட் கேட்டு வந்ததாகக் கூறுகிறார். அந்த கார் பின்லாந்து நாட்டின் தலைநகரில் இருந்து வடக்கே 380கி.மீ தொலைவில் உள்ள லாபுவா நகரில் ஜூன் மாதம் திருடப்பட்டதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் காணாமல் போன இடத்தில் இருந்து சுமார் 25கி.மீ தொலைவில் உள்ள சீனோஜோகியில் பல வாரங்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலோமேகி, ஃபின்னிஷ் போலீஸ் ஒரு குற்றத்தைத் தீர்க்க ஒரு பூச்சியைப் பயன்படுத்தியது இதுவே முதல்முறை எனக் கூறினார் ” என வெளியாகி இருக்கிறது.
பின்லாந்தில் காரில் கிடைத்த இறந்த கொசுவின் டி.என்.ஏ மாதிரி மூலம் திருடனைக் கண்டுபிடித்ததாக பின்லாந்து போலீஸ் நம்புவதாக பிபிசி, டெய்லி மெயில் உள்ளிட்ட பல செய்திகளில் இருக்கிறது. ஆனால், கைது செய்யப்பட்ட நபரின் தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்தே உலக அளவில் மீம்ஸ் பரவி வருகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.