கம்பிகளுக்கு இடையே குழந்தைக்கு பால் கொடுக்கும் தாயின் புகைப்படம்| எங்கு நிகழ்ந்தது ?

பரவிய செய்தி
கைக்குழந்தை வைத்துள்ள ஒரு தாயைச் சிறையிலடைத்து குழந்தைக்கு சிறைக்கம்பிகளூடாக தாய்ப்பால் கொடுக்கும் நிலைக்கு விட்டிருக்கிறது உலக வல்லரசு அமெரிக்கா..
மதிப்பீடு
விளக்கம்
கம்பிகளால் இரு பகுதியாக பிரிக்கப்பட்ட பகுதியில் தந்தை குழந்தையை தாங்கி இருக்க, தாய் குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படம் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட தாய் சிறை கம்பிகளுக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்ததாக குறிப்பிட்டு, ” உலகத்திற்கே வகுப்பெடுக்கும் அமெரிக்காவின் யோக்கியம் இதுதான் ” கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த பதிவுகளின் ஸ்க்ரீன்ஷார்ட்களை அனுப்பி, இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
அந்த புகைப்படத்தின் கீழே ” No more concentration camp ” எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படத்தை என்ஆர்சி அமல்படுத்தப்பட்ட பிறகு மேற்கு வங்கம், அசாம் பகுதியில் உள்ள தடுப்பு மையங்களில் நடந்த சம்பவம் எனக் குறிப்பிட்டு முகநூலில் பகிர்ந்து உள்ளனர் என அறிந்து கொள்ள முடிகிறது. இந்திய அளவில் பல காரணங்களுடன் பரவி வரும் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது, என்ன நிகழ்ந்தது என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
புகைப்படம் குறித்து தேடிய பொழுது, Pinterest தளத்தில் மேற்காணும் புகைப்படத்துடன் ” அர்ஜென்டினாவில் உள்ள பாஹியா ப்ளாங்க்கா பகுதியில் தன் தந்தை உடன் சமூக திட்டத்தில் முடிக்கப்படாத வீடுகளை ஆக்கிரமித்த மகளுக்கு தாய் வேலியின் வழியாக பாலூட்டுகிறார் ” எனக் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், எப்பொழுது நிகழ்ந்தது எனக் குறிப்பிடவில்லை.
2013-ம் ஆண்டு controappuntoblog.org எனும் தளத்தில் வெளியான செய்தியில், ” அர்ஜென்டினாவில் பிரச்சனையின் காரணமாக மக்களை உள்ளே நுழைய விடாமல் போலீஸ் தடுத்துள்ளனர். மேலும், இளம் தாயை அழைத்து வர முடியவில்லை, தந்தையும் குழந்தையும் புற எல்லைக்கு வெளியே கொண்டு வரப்படுவதில்லை ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அர்ஜென்டினாவில் அரசு தரப்பில் இருந்து குறைந்த வருவாய் கொண்ட மக்களுக்காக வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. ஆனால், கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே அருகே இருந்த சேரியில் இருந்த மக்கள் குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக குடியேறி வாழத் தொடங்கி உள்ளனர். இதை அறிந்த போலீஸ், கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்திற்கும், அதை சுற்றியுள்ள இடத்திற்கும் இடையே யாரும் உள்ளே வர இயலாத வகையில் அடைத்து உள்ளனர்.
இதனால், குழந்தை மற்றும் தந்தை ஒருபக்கமும், தாய் ஒரு பக்கமும் பிரிந்து உள்ளனர். போலீசார் வேலி அமைத்த விவகாரம் தொடர்பாக அங்குள்ள மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
நமக்கு கிடைத்த தகவல்களில் இருந்து, அமெரிக்காவில் சிறையில் இருக்கும் தாய் குழந்தைக்கு சிறை கம்பிகள் வழியாக பாலூட்டும் புகைப்படம் என பகிரப்பட்ட சம்பவம் 2013-ம் ஆண்டில் அர்ஜென்டியா நாட்டில் நிகழ்ந்த சம்பவம். அங்குதடுப்பு வேலிகளுக்கு இடையே தனது குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். சிறை கம்பிகள் அல்ல.
மேலும், இதே புகைப்படத்தை இந்தியாவில் உள்ள பங்களாதேஷ் முஸ்லீம்களுக்காக உருவாக்கப்பட்ட தடுப்பு மையங்களில் நிகழ்ந்த சம்பவம் என தவறாக பகிர்ந்தும் உள்ளனர்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.