ஊரடங்கால் ரயில் பெட்டி இணைப்பில் குழந்தையுடன் பயணிக்கும் பெண் ?| இந்தியாவைச் சேர்ந்தது அல்ல.

பரவிய செய்தி
உலகமெங்கும் இந்த லாக்டவுன்ல எந்த நாட்டு சாமான்ய மக்களாவத் இப்படி உயிரை பணையம் வைத்து கஷ்டப்பட்டு சொந்த ஊருக்கு செல்வதை பார்த்திருக்கிறீர்களா ?. கேடுகெட்ட முட்டாள் பிரதமரை கொண்ட நம் இந்திய தேசத்தில் மட்டுமே சாத்தியம்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் வேலை, உணவு இல்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை ரயில்களின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பலரும் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்லும் அவலம் நிகழ்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்நிலையில், ஊரடங்கால் ஒரு தாய் தன் குழந்தையுடன் உயிரை பணையம் வைத்து ரயிலில் சொந்த ஊருக்கு செல்வதாக கீழ்காணும் வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது. கே.ஜி.எப் திரைப்படத்தின் பாடலுடன் வைரலாகும் இவ்வீடியோ கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. ஆனால், தற்போது உள்ள சூழலுடன் தொடர்புப்படுத்தி இவ்வீடியோவை பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : ரயிலில் குழந்தையுடன் ஆபத்தான நிலையில் பயணிக்கும் பெண்| எங்கு நிகழ்ந்தது ?
கடந்த 2019 நவம்பர் 23-ம் தேதியே யூடர்ன் தாய் குழந்தையுடன் ரயில் பெட்டியின் இணைப்பில் பயணிக்கும் வீடியோ தொடர்பாக நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. எனினும், எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவ்வீடியோ 2016-ம் ஆண்டில் இருந்தே வைரலாகிக் கொண்டிருக்கிறது, எனினும் எங்கு எடுக்கப்பட்டது என உறுதியான தகவல் இல்லை எனக் குறிப்பிட்டு இருந்தோம். இம்முறை கூடுதலாக ஆராய்ந்து பார்த்தோம்.
2017 மே 18-ம் தேதி News Station என்ற யூடியூப் சேனலில், மத்திய ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனா வைரலாகும் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக விவரித்து இருந்தார். இந்த வீடியோவின் கமெண்ட்களில் சிலர் இந்த வீடியோ பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தது என்றும், சிலர் இதுபோன்ற பெட்டிகள் இந்தியாவில் இல்லை எனப் பதிவிட்டு இருந்தனர்.
பங்களாதேஷ் நாட்டில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் ரயில்களின் மேலே, பெட்டிகளின் இணைப்புகளில் கூட்டமாய் பயணிக்கும் நிகழ்வுகளை அடிக்கடி பார்க்க முடியும். அதுவும் பண்டிகை காலங்களில் ரயிலே மக்களால் நிறைந்து இருக்கும். இந்த வீடியோவிலும், பெட்டிகளின் இணைப்பில் குழந்தையுடன் அமர்ந்து இருக்கும் பெண்ணை அதே இணைப்பில் நின்று கொண்டே வரும் ஒரு நபர் வீடியோ எடுத்து உள்ளார் என்பதை பார்க்கலாம்.
பங்களாதேஷ் நாட்டில் இயக்கப்படும் ரயில்களின் பெட்டிகளில் உள்ள இரட்டைக் கோடு குறியீடு போல் வைரல் வீடியோவிலும் இருப்பதாய் காண்பித்து இருக்கிறோம். பங்களாதேஷ் ரயில்கள் என கீ வார்த்தைகளை பயன்படுத்தி தேடினால் கிடைக்கும் புகைப்படங்கள் சிலவற்றில் இரட்டைக் கோடு குறியீட்டை காண முடிகிறது. கீழ்காணும் வீடியோவில், அதுபோன்ற ரயிலில் மக்கள் கூட்டம் செல்வதை பார்க்கலாம்.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, ஊரடங்கால் ரயிலில் உயிரை பணையம் வைத்து குழந்தையுடன் பயணிக்கும் தாய் என வைரல் செய்யப்படும் வீடியோ கடந்த 2016-க்கு முன்பிருந்தே வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இருக்கும் ரயில் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, பங்களாதேஷ் நாட்டில் உள்ள ரயிலை போன்று இருப்பதையும் அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.