92 வயதான மோதிலால் வோரா ராகுல் காந்தியின் காலில் விழும் புகைப்படமா ?

பரவிய செய்தி
மோதிலால் வோரா (92) ராகுல் காந்தியின்(51) காலில் விழுகிறார். மற்றும் மன்மோகன் சிங், (88)பூங்கோத்தை பிடித்து நிற்கிறார் இத்தகைய அடிமைத்தனமாக இருக்கக்கூடியவர்கள் மட்டுமே காங்கிரஸில் பிழைப்பார்கள். காங்கிரஸின் அனைத்து அடிமைகளும் தொபகடீர் ன்னு காலில் விழ தயாராக இருக்க வேண்டும்.
மதிப்பீடு
விளக்கம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் 92 வயதான மோதிலால் வோரா காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் காலில் விழுவதாக இப்புகைப்படத்தை பாஜக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மோதிலால் வோரா (92) ராகுல் காந்தியின்(51)
காலில் விழுகிறார்.
மற்றும் மன்மோகன் சிங், (88)பூங்கோத்தை பிடித்து நிற்கிறார்இத்தகைய அடிமைத்தனமாக இருக்கக்கூடியவர்கள் மட்டுமே காங்கிரஸில் பிழைப்பார்கள்.
காங்கிரஸின் அனைத்து அடிமைகளும் தொபகடீர் ன்னு காலில் விழ தயாராக இருக்க வேண்டும். pic.twitter.com/JrMpcbthTE
— 🚩🚩Vimal Jain🚩🚩 (@vimal045Y) July 31, 2021
உண்மை என்ன ?
மத்திய பிரதேசத்தின் முதல்வராகவும், உத்தரப் பிரதேசத்தின் ஆளுநராகவும் இருந்த இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர் மோதிலால் வோரா 2020 டிசம்பர் 21-ம் தேதி தன்னுடைய 92-வது வயதில் உயிரிழந்தார். மோதிலால் வோரா ராகுல் காந்தி காலில் விழுந்ததாக இப்புகைப்படம் கடந்த 2019-ம் ஆண்டிலேயே இந்திய அளவில் வைரலாகி இருக்கிறது.
ஆனால், வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருப்பவர் மோதிலால் வோரா அல்ல. காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.சிங் டேவ்.
2018-ல் சத்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது அமைச்சராக பதவியேற்ற 67 வயதான டி.எஸ்.சிங் டேவ் ராகுல் காந்தியின் காலில் விழுவது போல் எடுக்கப்பட்ட புகைப்படம்.
Here’s the truth of the picture that shows TS Singh Deo bending down to touch Rahul Gandhi’s feet!
(@KunduChayan, @NikhilDawar)https://t.co/j5RUVIAfkT— IndiaToday (@IndiaToday) December 20, 2018
2018 டிசம்பரில், டி.எஸ்.சிங் டேவ் ராகுல் காந்தி காலில் விழுந்ததாக இதே புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிய போது இந்தியா டுடே கட்டுரை வெளியிட்டு இருந்தது. அந்த கட்டுரையில், ” வைரலாகும் கூற்றை டி.எஸ்.சிங் டேவ் மறுத்ததாகவும், மற்றொரு காங்கிரஸ் தலைவர் ஆர்பிஎன் சிங் உடன் பேசுகையில் சிங் டேவ் நுழைவாயிலில் ராகுல் காந்தி காலில் விழ முயற்சித்தாகவும், அதை ராகுல் காந்தி தடுத்ததாகவும் கூறினார் ” என வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், 92 வயதான மோதிலால் வோரா காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காலில் விழுவதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் தவறானது. புகைப்படத்தில் இருப்பது மோதிலால் வோரா அல்ல, 2018 டிசம்பரில் சத்திஸ்கர் மாநிலத்தின் அமைச்சராக பொறுப்பேற்ற டி.எஸ்.சிங் டேவ் என அறிய முடிகிறது.