இந்திய நிறுவனம் உருவாக்கிய பைக் ஏர்பேக் தொழில்நுட்பம் என அமெரிக்கா வீடியோவைப் பதிவிட்ட பாஜக பொருளாளர் !

பரவிய செய்தி
மோட்டார் பைக் விபத்துக்களுக்கான தடுப்பு தொழில்நுட்பத்தை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்திய ஸ்டார்ட்அப் கம்பெனிகள் தற்போது தொழில்நுட்பத்தில் தங்களின் சக்தியை உலகிற்கு நிரூபித்து வருகின்றன. சூப்பர் இந்தியா. மோடி இந்தியா.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “மோட்டார் பைக் விபத்துக்களுக்கான தடுப்பு தொழில்நுட்பத்தை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்திய ஸ்டார்ட்அப் கம்பெனிகள் தற்போது தொழில்நுட்பத்தில் தங்களின் சக்தியை உலகிற்கு நிரூபித்து வருகின்றன ” என வீடியோ ஒன்றைப் பதிவிட்டு உள்ளார்.
Preventive technology developed for motor bike accidents by an Indian start up company. Indian Startups are now proving to the world their power in technology.
சூப்பர் இந்தியா#மோடியின்_இந்தியா pic.twitter.com/ISpgGMHSS8— S.R.SEKHAR 🇮🇳 (@SRSekharBJP) April 18, 2023
மேலும் அந்த வீடியோவில் வரும் மோட்டார் பைக்கானது Airbag மற்றும் Bike belt உடன் வடிவமைக்கப்பட்டுள்ளதைப் போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பகிரப்பட்ட வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்கையில், இது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள Forteon என்னும் Startup நிறுவனம் தன்னுடைய வலைதளத்தில் 2016ம் ஆண்டுமே 19 அன்று வெளியிட்டுள்ள வீடியோ என்பதை அறிய முடிந்தது.
Forteon தன்னுடைய புதிய தயாரிப்பாக Motorcycle with Ejection Airbag என்னும் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தயாரிப்பு மோட்டார் சைக்கிள்களை கார்களைப் போலவே பாதுகாப்பானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் கார்கள் பெரும் முன்னேற்றம் கண்டாலும், மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு விபத்தின் போது மிகக் குறைவான- முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இந்த காரணத்திற்காக மோட்டார் சைக்கிள் Ejection Airbag-ஐ உருவாக்க உள்ளதாக தன்னுடைய காப்புரிமையைக் குறிப்பிட்டு Crowd funding-ஐ 2016 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது என்பதை அதன் வலைதளத்தில் பார்க்க முடிந்தது.
Forteon தன்னுடைய தயாரிப்பை பிரபல அமெரிக்க நிறுவனமான Indiegogo வின் வலைத்தளத்திலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் தற்போது பரவி வரும் வீடியோவானது Andras Fenyves என்பவரின் யூடியூப் சேனல் பக்கத்தில் “Forteon – AirbagForBike 2019 Campaign” என்னும் தலைப்பில் 2019 பிப்ரவரி 13 அன்று வெளியிடப்பட்டுள்ளதோடு, அதில் Indiegogo நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளப்பக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்தியாவின் செனாப் பாலத்தில் நடத்தப்பட்ட இரயில் சோதனை ஓட்டம் எனப் பரப்பப்படும் சீனா வீடியோ
மேலும் படிக்க: ஏரி தண்ணீரில் மூழ்கிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள்.. இந்தியா எனப் பரவும் சீனா வீடியோ.
இதற்கு முன்பாக, இந்தியாவைச் சேர்ந்தது என சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்ட வெளிநாட்டு வீடியோக்கள் மற்றும் பதிவுகள் குறித்தும் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
மேலும் படிக்க: இந்திய ஆற்றுப் பயண கப்பல் என வெளிநாட்டு சொகுசு கப்பல் படத்தை பயன்படுத்திய தமிழ்நாடு பாஜக !
முடிவு:
நம் தேடலில், பாஜக ஆட்சியில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ள மோட்டார் பைக் விபத்துக்களுக்கான தடுப்பு தொழில்நுட்பம் என தமிழ்நாடு பாஜக பொருளாளர் பதிவிட்ட வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. அது ‘Forteon’ என்னும் அமெரிக்க நிறுவனம் தன்னுடைய வலைதளத்தில் 2016 மே 19 அன்று வெளியிட்டுள்ள அனிமேஷன் வீடியோ என்பதை அறிய முடிகிறது.