சத்ய சாய்பாபா காலில் எம்பி ஆ.ராசா விழுந்து வணங்குவதாகப் பரவும் தவறானப் புகைப்படம் !

பரவிய செய்தி
வா ராசா வா… சனாதனத்தை ஒழிக்க வீறுகொண்டு புறப்பட்டு வா..
மதிப்பீடு
விளக்கம்
சமீபமாகவே நடிகர் ரஜினிகாந்த் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அதே போன்ற பல்வேறு சம்பவங்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வரிசையாகப் பரவி வருவதைக் காணமுடிகிறது.
இந்நிலையில், திமுக எம்பி ஆ.ராசா, ஆன்மிகவாதியான சத்ய சாய்பாபாவின் காலில் விழுந்து வணங்குவதைப் போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
2ஜி புகழ் ராசா சனாதனத்தை மன்டியிட்டு அழித்த போது pic.twitter.com/gUeXUTxrl4
— Maha (@Maha39574742) August 27, 2023
2ஜி புகழ் ராசா சனாதனத்தை மன்டியிட்டு அழித்த போது pic.twitter.com/BTgCwyGPdF
— Krishbabu (@Krishna18795371) August 28, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் ஆ.ராசா இல்லை என்பதை அறிய முடிந்தது.
இதுகுறித்து சத்ய சாய்பாபாவின் அதிகாரப்பூர்வ ஆன்மிக இணையதளங்களில் தேடினோம். Vidyullekha என்ற இணையதளத்தில் பரவி வரும் இந்தப் புகைப்படம் குறித்த செய்தியைக் காண முடிந்தது.
அதில், புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் ஆதித்ய நிட்டாலா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில், சாய் பாபாவை சந்தித்த அனுபவங்கள் குறித்து அவர் விவரித்திருந்ததையும் காண முடிந்தது.
கடந்த 2020 நவம்பர் 22 அன்று பதிவிடப்பட்டுள்ள அந்த பதிவில், “2020 95வது பிறந்தநாளுக்கான சிறப்பு பதிப்பு”என்ற தலைப்பின் கீழ் சமூக ஊடகங்களில் பரவிவரும் இந்தப் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் ஆ.ராசா இல்லை என்பது உறுதியானது.
மேலும் படிக்க: அமித்ஷாவின் காலில் விழுந்த கனிமொழி எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !
மேலும் படிக்க: இந்திரா காந்தி காலில் கருணாநிதி விழுந்ததாகப் பரவும் வீடியோ| உண்மை என்ன ?
முடிவு:
நம் தேடலில், திமுக எம்பி ஆ.ராசா சத்ய சாய்பாபா காலில் விழுந்து வணங்குவதாகப் பரவும் புகைப்படத்தில் இருப்பவர் ஆ.ராசா இல்லை. மேலும் அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் ஐதராபாத்தைச் சேர்ந்த ஆதித்ய நிட்டாலா என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.