மத்தியப் பிரதேச சுகாதாரத்துறை செயலாளருக்கு கொரோனா உறுதி | விசாரணைக்கு உத்தரவிட்ட அரசு.

பரவிய செய்தி
இந்த அம்மா யார் தெரியுமா? மத்தியப் பிரதேசத்தின் சுகாதாரத் துறைச் செயலாளர் பல்லவி ஜெயின். அதிகாரமும் செல்வாக்கும் இருந்தால் இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இவருடைய மகன் வெளிநாட்டிலிருந்து வந்த செய்தியை இவர் மறைத்துவிட்டார்.
மதிப்பீடு
விளக்கம்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் சுகாதாரத்துறை செயலாளர் பல்லவி ஜெயினுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரின் மகன் அமெரிக்காவில் இருந்து வந்ததை மறைத்ததன் விளைவால் அவர் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாகக் கூறி ஒரு ஃபார்வர்டு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் சுகாதாரத்துறை செயலாளர் பல்லவி ஜெயின், ஹெல்த் கார்ப்பரேஷன் எம்டி விஜய் குமார் மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் வீணா சின்ஹா உள்ளிட்டோருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் பல்லவி ஜெயின் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானால் பாராட்டப்பட்டவர்.
எனினும், உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களை மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்ள தாமதப்படுத்தியது கேள்விக்கு உள்ளாகியது. பல்லவி ஜெயின் மற்றும் விஜய் குமார் ஆகிய இருவரின் மகன்களும் அமெரிக்காவில் இருந்து வந்ததை தெரியப்படுத்தவில்லை எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஏப்ரல் 8-ம் தேதி வெளியான NDTV செய்தியில், ” பல்லவி ஜெயினுக்கு அம்மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பி கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து அம்மாநில அரசின் மக்கள் தொடர்பு துறையின் வெளியிட்ட அறிக்கையில், அவரின் மகன் மார்ச் 16-ம் தேதி அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார் மற்றும் இந்திய அரசு வழங்கியபடி, கட்டுப்பாடுகள் கடைப்பிடிப்பதற்கான 12 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இல்லை. மேலும், அவரின் மகன் டெல்லி விமானநிலையத்தில் சோதிக்கப்பட்டு அறிகுறிகள் இல்லை என்பதால் மார்ச் 30 வரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார், இப்பொழுது ஆரோக்கியமாகவும் உள்ளார். பல்லவி ஜெயினுக்கு ஏப்ரல் 4-ம் தேதி வைரஸ் உறுதி செய்த பின்னர், அவரின் குடும்ப உறுப்பினர்களும் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் தென்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளதாக ” வெளியாகி இருக்கிறது.
இந்தியா டுடேவில் வெளியான செய்தியில், ” சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியது எப்படி என்பதை விசாரிக்க மத்தியப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது”. மத்தியப் பிரதேசத்தில் 85 கொரோனா வைரஸ் வழக்குகளில் குறைந்தது 40 பேர் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்களாக பதிவாகி இருக்கிறார்கள். இவர்கள் யாரும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்புடையவர்களாக இல்லை.
மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் நோய் பரவுவதை சரிபார்க்க வடிவமைக்கப்பட்டு இருந்த விதிகளை தவிர்த்து விட்டார்களா என்ற குற்றச்சாட்டால் தங்களை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.
பல்லவி ஜெயின் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்படவில்லை என்றும், அவருக்காக மாவட்ட நிர்வாகம் அனுப்பிய பணியாளர்கள் இருக்கும் புகைப்படத்தினை அப்பகுதியில் வசிக்கும் பத்திரிகையாளர் ஒருவர் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டதாக நியூஸ் 18 ஆங்கில செய்தியில் வெளியாகி இருக்கிறது.
” கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், தனக்கு எந்தவித அறிகுறியும் இல்லை நான் நலமாக உள்ளேன் என வீடியோ மூலம் பல்லவி ஜெயின் தகவல் தெரிவித்ததாகவும் வெளியாகி இருக்கிறது”.
மேலும், நான் துறை சார்ந்தவர்களுடன் அதிகம் தொடர்பில் இருந்த காரணத்தினால் பிறரிடம் இருந்து தனக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறியுள்ளார். அவரின் தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது. இதே நேரத்தில், அம்மாநிலத்தில் கொரோனா வைரசால பாதிக்கப்பட்ட காவல்துறையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.