திமுக எம்.பி ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை விசாரணை எனப் பரப்பப்படும் பழைய செய்தி !

பரவிய செய்தி
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் அமலாக்க துறையினரால் அழைத்து விசாரிக்கப்பட்டு கொண்டு இருப்பதை வட நாட்டு ஆங்கில ஊடகம் காட்ட வழக்கம் போல் தமிழக ஊடகங்கள் கப்சிப். இதுதான் இவர்கள் நியாயம் நடுநிலை.
மதிப்பீடு
விளக்கம்
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அமலாக்கத் துறையினரால் விசாரிக்கப்படுவதை வட இந்திய ஆங்கில ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழ் ஊடகங்கள் இதுகுறித்து செய்தி வெளியிடவில்லை என டைம்ஸ் நவ் வீடியோ ஒன்றினை பாஜக, அதிமுக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
😡👆👇திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் அமலாக்க துறையினரால் அழைத்து விசாரிக்கப்பட்டு கொண்டு இருப்பதை வட நாட்டு ஆங்கில ஊடகம் காட்ட வழக்கம் போல் தமிழக ஊடகங்கள் நவ துவாரங்களில் மூடி கப்சிப்.இதுதான் இவர்கள் நியாயம் நடுநிலை.😡👆👇 pic.twitter.com/TPDGE21YPI
— சுந்தரமூர்த்தி சமூக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் (@Sundara48204152) April 23, 2023
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் அமலாக்க துறையினரால் அழைத்து விசாரிக்கப்பட்டு கொண்டு இருப்பதை வட நாட்டு ஆங்கில ஊடகம் காட்டுகிறது.
வழக்கம் போல தமிழக ஊடகங்கள் வாய் மூடி வேடிக்கை பார்க்கிறது.
இதுதான் இவர்களின் ஊடக தர்மமா??? #கோபாலபுர_கொத்தடிமைகள்
😡😡😡 pic.twitter.com/I9AviF9vV3— சிவா (எ) செல்வக்குமார் 🌱🌱 அஇஅதிமுக🌱🌱 (@admksiva582021) April 25, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய ‘டைம்ஸ் நவ்’ வீடியோ குறித்து கீ வேர்ட்களை கொண்டு இணையத்தில் தேடினோம். 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி அவ்வீடியோவினை டைம்ஸ் நவ் தங்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அத்தேதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அமலாக்கத் துறையினரால் விசாரிக்கப்பட்டது தொடர்பாகத் தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதா என்பது குறித்து தேடினோம். ‘புதிய தலைமுறை’ இணையதளத்தில் “சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: ஜெகத்ரட்சகனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
அதில், “சட்டவிரோத பணபரிமாற்றம் மூலம் ரூ.65 கோடி மதிப்பிலான சொத்துகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வாங்கியதாக அமலாக்கத்துறைக்கு தகவல் வந்தது. இது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள், நுங்கம்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல், விகடனின் ‘மிஸ்டர் கழுகு’ பகுதியிலும் இது குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது. மேலும், தினமலர், நியூஸ் ஜெ ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெகத்ரட்சகன் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியபோது தினமணி, மின்னம்பலம், மாலை மலர் முதலான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வழக்கை 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : லாலு பிரசாத் வீட்டில் ரெய்டு தொடர்பான செய்திக்குத் தவறான புகைப்படங்களைப் பதிவிட்ட அர்ஜுன் சம்பத் !
முன்னதாக அமலாக்கத்துறை சோதனை குறித்து பரப்பப்பட்ட போலி செய்திகள் குறித்த உண்மைத் தன்மையினை கட்டுரையாக யூடர்ன் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : மேற்கு வங்கத்தில் அமைச்சரின் டிரைவர் வீட்டில் எடுக்கப்பட்ட பண பீரோவா ?
முடிவு :
நம் தேடலில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அமலாக்கத்துறை சோதனை செய்ததைத் தமிழ் ஊடகங்கள் செய்தியாக வெளியிடவில்லை என்பது உண்மை அல்ல. ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை 2020ம் ஆண்டு விசாரணை செய்துள்ளது. அப்போதே தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.