ஒரு கழிவறை ரூ.90 லட்சமா ?.. கரூர் எம்.பி ஜோதிமணி பற்றிப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.90 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த பொதுக்கழிவறையைக் கட்டியுள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
நீங்க வேணும்னா 3 லட்சத்துல வீடு
கட்டலாம்! நம்ம கரூர் ஜோதிமணி அக்கா MP நிதியில் வெறும் ரூ.90.0000 (90 லட்சம் ரூபாயில்) கட்டப்பட்ட கழிவறை.
அடேங்கப்பா , இதுதான் சாதனை. pic.twitter.com/ouwydOBSPj— தினேஷ் கிருஷ்ணமூர்த்தி 🇮🇳 diMO (@Paru_Kriz) July 2, 2022
கரூரில் ஜோடிமணி எம்.பி நிதியில் கட்டப்பட்ட பொதுக்கழிவறை!
அதுக்கு என்னன்னு கேக்குறீங்களா? செலவு ஜஸ்ட் 90 லட்ச ரூபாய்தான்! pic.twitter.com/0oghakkBSL— பூபதி புவனேஷ் (@Bhuvanesh61) July 3, 2022
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படம் குறித்து எம்.பி ஜோதிமணியின் ட்விட்டர் பக்கத்தில் தேடுகையில், ” மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்னும் சிறிது நேரத்தில் திறப்புவிழா செய்யப்பட இருக்கும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளில் சில ” என ஜூன் 2-ம் தேதி கட்டிடங்களின் புகைப்படங்கள் சிலவற்றை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களால் இன்னும் சிறிது நேரத்தில் திறப்புவிழா செய்யப்பட இருக்கும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளில் சில. pic.twitter.com/Iq9cp5zAGI
— Jothimani (@jothims) July 2, 2022
பொதுக்கழிவறை புகைப்படத்தில், ” கரூர் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு செல்வி S.ஜோதிமணி எம்பி அவர்கள் நிதியிலிருந்து கட்டப்பட்டது. இடம் : சின்னதாராபுரம், மதிப்பீடு : ரூ.9.00 இலட்சம் ” என்று எழுதப்பட்டு உள்ளது.
ஜூலை 2-ம் தேதி கரூர் மாவட்டத்தில் முடிவுற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட போது பேசிய எம்.பி ஜோதிமணி, ” கரூர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு வகுப்பறைகள், நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள், சின்னதாராபுரம் பரமத்தி நொய்யல் அரசுப் பள்ளியில் கழிவறை” என முடிவுற்ற திட்டங்களை குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
ஆகவே, புகைப்படத்தில் இருப்பது சின்னதாராபுரம் பரமத்தி நொய்யல் அரசுப் பள்ளியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவறையாகும்.
முடிவு :
நம் தேடலில், கரூர் எம்.பி ஜோதிமணி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டிய பொதுக்கழிவறை ரூ.90 லட்சம் எனப் பரப்பப்படும் தகவல் தவறானது. அது ரூ.90 லட்சம் அல்ல , ரூ.9 லட்சம் என அறிய முடிகிறது.