எம்.பிக்களின் வருகைப்பதிவு பட்டியலில் கடைசியில் ராகுல் காந்தி – இந்தியா டுடே

பரவிய செய்தி
இந்தியா டுடே ஆய்வில் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற வருகைப்பதிவு பதிவு D-Grade மதிப்பையே பெற்று உள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
நாடாளுமன்றத்தில் உள்ள பிஜேபி, காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களில் பிரபலமானவர்களின் விவரங்களை வெளியிட்டது இந்தியா டுடே. அதில், குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் வருகைப் பதிவு பட்டியலின் கீழே உள்ளன.
விளக்கம்
இந்தியா டுடே சார்பில் 16-வது நாடாளுமன்ற எம்பிக்களின் தரவரிசை குறித்த ஆய்வின் கட்டுரையை ஏப்ரல் 2019-ல் வெளியிட்டது. இந்தியா டுடேவின் தரவுகள் நுண்ணறிவு குழு, நாடாளுமன்ற எம்பிக்களின் வருகைப்பதிவு, கேட்கப்பட்ட கேள்விகள், அறிமுகப்படுத்திய ப்ரைவேட் உறுப்பினர் பில்ஸ்களின் எண்ணிக்கை, MPLADS நிதியை பயன்படுத்தியது, ஆளுமை குறித்த மக்கள் கருத்து உள்ளிட்ட ஐந்து காரணிகளை அடிப்படையாக வைத்து ஆய்வை மேற்கொண்டர்.
ஆய்வில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 39 எம்பிக்களில் 11 எம்பிக்கள் D அல்லது D+ என்ற குறைவான மதிப்பை பெற்றுள்ளனர். பிஜேபி கட்சியின் 195 எம்பிகளில் 33 எம்பிக்கள் D அல்லது D+-ஐ பெற்றுள்ளனர்.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உறுதிச் செய்யப்பட்ட 416 எம்பிக்களின் பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 387-வது இடத்திலும், சோனியா காந்தி 381-வது இடத்திலும் உள்ளனர். ராகுல் காந்தி பட்டியலின் இறுதி இடங்களில் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.
ராகுல் காந்தியின் வருகைப்பதிவு 52 சதவீதம், தொகுதியின் மேம்பாட்டுக்காக எம்பி நிதியான 25 கோடியில் 19.5 கோடியை பயன்படுத்தி உள்ளார் எனக் குறிப்பிட்டு உள்ளனர். நாடாளுமன்றத்தில் பலமுறை எதிர்ப்புகளை, கருத்துகளை பகிர்ந்து கொண்டாலும், கேள்வி நேரத்தில் எந்தவொரு கேள்விகளையும் எழுப்பவில்லை மற்றும் ப்ரைவேட் உறுப்பினர் பில்ஸ்கள் தாக்கல் செய்யவில்லை என கூறியுள்ளனர்.
இதேபோன்று சோனியா காந்தியின் வருகைப்பதிவு 60% என குறைவாகவே இருந்துள்ளது.
எனினும், இரு கட்சிகளின் தலைவர்களை ஒப்பிடுவது என்பது சாத்தியமில்லாதது என்றும் இந்தியா டுடே தெரிவித்து உள்ளது. காரணம், யூனியன் அமைச்சர்கள், லோக் சபா சபாநாயகர், துணை சபாநாயகர் உள்ளிட்டோர் வருகைப்பதிவில் கையெழுத்திட தேவை இல்லை .
ஆகையால், குறைந்த அளவிலான தரவுகள் மட்டுமே கிடைத்ததால் பிரதமர் மற்றும் யூனியன் அமைச்சர்களை பட்டியலில் தரம் பிரிக்க முடியவில்லை என தெரிவித்து உள்ளனர்.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, நாடாளுமன்ற எம்பிக்களின் வருகைப்பதிவில் ராகுல் காந்தி டி-கிரேட் மதிப்பை பெற்றுள்ளார் என வெளியான தகவல் உண்மையே.