தேர்தலுக்காக திருவிழாவிற்கு தடை கேட்ட சு.வெங்கடேசன் ரம்ஜானுக்காக மட்டும் தேர்வை மாற்ற சொல்வதாகப் பரவும் வதந்தி

பரவிய செய்தி
இன்று : ரம்ஜான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடப்பதால் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் தேர்வுத் தேதிகளை சுட்டிக்காட்டி மத்திய கல்வித்துறை அமைச்சர், சிபிஎஸ்இ இயக்குநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்
அன்று : மதுரையில் தேர்தலைத் தள்ளிவைக்க தேவையில்லை சித்திரைத் திருவிழாவை தள்ளி வைக்கலாம். அல்லது திருவிழாவுக்கு இந்த வருடம் தடைவிதிக்கலாம். ஒரு வருடம் ஆற்றில் அழகர் இறங்கவில்லை என்றால் மதுரை ஒன்று அழிந்துவிடாது. சு.வெங்கடேஷ்
மதிப்பீடு
விளக்கம்
மதுரை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அன்று தேர்தலுக்காக மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை கேட்டதாகவும், இன்று இஸ்லாமியர் பண்டிகையான ரம்ஜானுக்காக மட்டும் சிபிஎஸ்இ தேர்வை தள்ளி வைக்க சொல்வதாகவும் கூறும் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக போலியான நியூஸ் கார்டுகள் மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
மேலும் படிக்க : CPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா ?
இவ்வாறு பரவிய பதிவுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறுப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. அப்போது பரவிய வதந்திகள் குறித்து நாமும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
ரம்ஜான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடப்பதால் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும்!
– சு.வெங்கடேசன் எம்.பி. #Ramzan | #CBSEExam | #SuVenkatesanMP pic.twitter.com/g4geGTc9z0
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 6, 2021
அடுத்ததாக, எம்பி சு.வெங்கடேசன் ரம்ஜான் பண்டிகையில் நடைபெறும் தேர்வை மாற்றி வைக்க சொன்னதாக இணைக்கப்பட்ட நியூஸ் கார்டு குறித்து தேடுகையில், ” ரம்ஜான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடப்பதால் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும்! – சு.வெங்கடேசன் எம்.பி ” என்ற செய்தி 2021 பிப்ரவரி 6ம் தேதி புதிய தலைமுறை செய்தி சேனலில் வெளியாகி இருக்கிறது.
தமிழர் திருநாளில் SBI முதன்மைத் தேர்வுகள் கூடாது என நேற்று 12 மணி நேரம் காத்திருந்து போராடினோம் .
மாண்புமிகு தமிழக முதல்வரும் தொடர்ந்து முயற்சி செய்தார்.
ஆனால் இனிமேல் தேர்வுத்தேதியை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது ஒன்றிய நிதியமைச்சகம்.1/3 pic.twitter.com/F74RJh35Po
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 14, 2023
எம்பி சு.வெங்கடேசன் ரம்ஜான் பண்டிகையின் போது நடைபெற்ற சிபிஎஸ்இ தேர்வை மட்டும் மாற்றச் சொல்லி வலியுறுத்தவில்லை. 2023 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட எஸ்.பி.ஐ தேர்வை மாற்றி வைக்கக் கூறி வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
உண்மை இப்படி இருக்க, எம்பி சு.வெங்கடேசன் இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜானுக்காக மட்டும் தேர்வை மாற்றி வைக்கச் சொல்வதாக பழைய செய்தியையும், பழைய வதந்தியையும் இணைத்து தவறாக பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், எம்பி சு.வெங்கடேசன் மதுரை தேர்தலுக்காக சித்திரைத் திருவிழாவை தடை செய்ய சொன்னதாகக் கூறும் தகவல் வதந்தியே. அதேபோல், ரம்ஜான் பண்டிகையின் போது நடக்க இருந்த சிபிஎஸ்இ தேர்வை சு.வெங்கடேசன் மாற்ற சொன்னது 2021ம் ஆண்டு நிகழ்ந்தது. ரம்ஜான் மட்டுமின்றி 2023 பொங்கல் பண்டிகையின் போது நடைபெற்ற எஸ்பிஐ தேர்வை மாற்றி வைக்கக் கூறியும் சு.வெங்கடேசன் போராடி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.