டெல்லியில் இருந்தே தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்.. ஹெச்.ராஜா பகிர்ந்த திருமாவளவனின் எடிட் வீடியோ !

பரவிய செய்தி
திருமாவளவன் டெல்லியில் இருந்து கொண்டே தென்மாவட்டத்தை தீப்பிடிக்க வைக்க முடியும். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வைக்க முடியும், பேருந்துகள் ஓடாது, விமானங்கள் பறக்காது, ரயில்கள் இயங்காது.. அந்த நிலையை உருவாக்க முடியும்.
மதிப்பீடு
விளக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கூட்டத்தில் பேசுகையில், டெல்லியில் இருந்தே தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன் என வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவதாக 21 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்றை பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டு, பார்க்க பகிர்க எனக் குறிப்பிட்டு இருந்தார்.
டெல்லியில் இருந்து கொண்டே தென்மாவட்டத்தை தீ பிடிக்க வைக்க முடியும் pic.twitter.com/bo23v8j14D
— 🚩 Mahesh M 🚩 (@mahesh74391485) February 26, 2023
எம்பி திருமாவளவன் பேசும் வீடியோ கடந்த 2019ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளது. 2019 ஜூலை 16ம் தேதி நியூஸ் ஜெ வெளியிட்ட செய்தியில், ” மக்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற பிறகு திருமாவளவன் பொதுமேடையில் பேசும் காணொளிக்காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் பகிரங்கமாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் திருமாவளவன் பேசியுள்ளார் ” என இடம்பெற்று இருக்கிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ சிறுபகுதி மட்டுமே, இதை எங்கு, எதற்காக பேசினார் எனத் தெரிந்து கொள்ள எம்.பி திருமாவளவனின் முழுமையானப் பேச்சு குறித்து தேடுகையில், 2019 ஜூலை 23ம் தேதி திருமா லைவ் எனும் முகநூல் பக்கத்தில், ” மதுரை சின்ன உடைப்பில் புரட்சியாளர் அம்பேத்கர், தியாகி இமானுவேல் சேகரன் ஆகியோரின் சிலை உடைப்பு தொடர்பாக 8 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர் திருமா அவர்களின் முழுமையான உரை ” எனக் கூறி 1 மணி நேர வீடியோவை பதிவிட்டு இருந்தனர்.
மேற்காணும் வீடியோவில் 3.45வது நிமிடத்தில் திருமாவளவன் பேசுகையில், “உலகிலேயே சிறந்த வன்முறையாளர்கள் யார் என்றால் காவல்துறையினர் தான். திருமாவளவன் டெல்லியில் இருந்து கொண்டே தென்மாவட்டத்தை தீப்பிடிக்க வைக்க முடியும். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வைக்க முடியும், பேருந்துகள் ஓடாது, விமானங்கள் பறக்காது, ரயில்கள் இயங்காது.. அந்த நிலையை உருவாக்க முடியும். ஆனால், திருமாவளவன் ரெளடி அல்ல. திருமாவளவன் புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசு. திருமாவளவன் ரெளடி அல்ல, புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளைப் படித்தவன், நாகரீகத்தை உணர்த்தவன். ஆகவே எதிர்ப்பை எப்படி தெரிவிக்க வேண்டுமோ, அப்படி தெரிவிப்பவர்கள் தான் விடுதலை சிறுத்தைகள் ” எனப் பேசி இருக்கிறார்.
2012 ஆகஸ்ட் மாதம் மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே பெருங்குடி பகுதியில் அமைக்கப்பட்ட அம்ப்தேகர் சிலை மற்றும் சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள இமானுவேல் சேகரன் மற்றும் அம்பேத்கர் சிலைகளை சிலர் நள்ளிரவில் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலைகளை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தினகரன், விகடன் உள்ளிட்டவை செய்தி வெளியிட்டு இருக்கின்றன.
திருமாவளவன் பேசிய வீடியோவின் தொடக்கத்தில் உடைக்கப்பட்ட இமானுவேல் சேகரன் மற்றும் அம்பேத்கர் சிலையை திருமாவளவன் பார்வையிட்ட பிறகே பேசத் தொடங்குவார். அதேபோல், உடைக்கப்பட்ட சிலைகளின் புகைப்படமும் தினகரன் செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், எம்பி திருமாவளவன் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாகப் பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டது. 2012ல் சிலை உடைப்பு சம்பவம் குறித்து திருமாவளவன் பேசிய முழுமையான உரையில், டெல்லியில் இருந்து கொண்டே தென்மாவட்டத்தை தீப்பிடிக்க வைக்க முடியும் எனக் கூறிய பின், ஆனால் திருமாவளவன் ரெளடி அல்ல, எதிர்ப்பை எப்படி தெரிவிக்க வேண்டுமோ, அப்படி தெரிவிப்போம் எனப் போராட்டத்தில் பேசியதை எடிட் செய்து பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.