ம.பியில் பட்டப்பகலில் பெண்களை கடத்தும் கும்பல் என வைரலாகும் வீடியோ.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநில ஜபல்பூரில் பட்ட பகலில் பெண்களை கடத்துகிறது ஒரு கும்பல். குற்றம் அதிகம் நடக்கும் மாநிலமாக மாறியது மத்திய பிரதேசம்.

மதிப்பீடு

விளக்கம்

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் பட்டப்பகலில் ஒரு கும்பல் பெண்களை கடத்துவதாக, இளம்பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றும் 26 நொடிகளை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

கடந்த ஆண்டு மே 28-ம் தேதி சிங்கராஜ் என்பவரின் முகநூல் பக்கத்தில் பதிவான வீடியோ  ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு இருக்கிறது. அதேவீடியோ, மீண்டும் தற்போது பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.

உண்மை என்ன ?

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் இளம்பெண் கடத்தப்பட்ட வைரல் வீடியோ குறித்து தேடுகையில், இளம்பெண் பட்டப்பகலில் கடத்தப்படும் வீடியோ வைரலாகுவதாக 2020 மே 25-ம் தேதி ஜீ நியூஸ், நியூஸ்18, நவபாரத் டைம்ஸ் உள்ளிட்ட ஹிந்தி செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

Advertisement

” மத்தியப் பிரதேசதின் ஜபல்பூர் மாவட்டத்தில் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் செல்லும் வீடியோ வைரலாகி அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியது. அம்மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான பெண் தன் காதலனுடன் வாழ விருப்பி மார்ச் 10-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் பெண்ணை காணவில்லை என போலீசில் புகார் அளித்து இருக்கிறார்கள். ஆனால், அந்த பெண்ணை காதலனுடன் சென்ற தகவலை போலீசார் குடும்பத்தினருக்கு தெரிவித்த பிறகு அப்பகுதிக்கு சென்று பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்து செல்லத் தொடங்கினர். அவர் காரில் கட்டாயப்படுத்தி ஏற்றப்பட்ட வீடியோ வைரலானது.

இந்த விசயம் போலீசாருக்கு தெரியவந்ததும், இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து பேசியுள்ளனர். அப்பெண் தன் காதலனுடன் வாழ குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கவில்லை. எனினும், பெண்ணை அவரது காதலனுடன் வாழ போலீசார் அனுமதித்து பேசி முடித்ததாக ” நியூஸ் 18 செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

வைரல் செய்யப்படும் வீடியோ பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியவர்கள் அப்பெண்ணின் குடும்பத்தினரே. ஆனால், வீடியோவின் பின்புலம் தெரியாமல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

முடிவு :

நம் தேடலில், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் பட்டப்பகலில் பெண்களை ஒரு கும்பல் கடத்துவதாக பரப்பப்படும் வீடியோ கடந்த ஆண்டு மே மாதம் ஜபல்பூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தை சார்ந்தது. காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணை அக்குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதையும், அந்த பெண்ணை மீண்டும் காதலனுடன் போலீசார் சேர்த்து வைத்ததையும் அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button