This article is from Nov 27, 2017

MRP விலையானது GST வரியையும் உள்ளடக்கியது.

பரவிய செய்தி

நாம் வாங்கும் அனைத்து பொருட்களின் MRP விலையானது GST உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது தான். அதற்கு மேல் பணம் தரத் தேவையில்லை. ஆனால், தற்போது சில கடைகளில் MRP விலையின் மீதே GST வரியைச் சேர்கின்றனர்.

மதிப்பீடு

சுருக்கம்

MRP அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது மற்றும் ஒரு பொருளின் அதிகபட்ச விலையாகும். அதனுடன் GST வரியை சேர்த்து வசூலிப்பது சட்டப்படி குற்றமாகும் என்று GST ஆணையம் தெரிவித்துள்ளது.

விளக்கம்

“ சரக்கு மற்றும் சேவை ” என்ற GST வரியை அமல்படுத்தியது முதல் பெரும் பிரச்சனைகள் எழுந்த வண்ணமே உள்ளன. ஒரு பொருளின் மீது விதிக்கப்படும் பல வரிகளுக்கு பதிலாக ஒரே வரியா GST விதிக்கப்படுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களின் MRP(Maximum Retail Price) என்ற அதிகபட்ச விற்பனை விலையானது அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது ஆகும். அத்தகைய விலையானது பொருட்களின் மீதே அச்சிடப்பட்டிற்கும். அதற்கு மேல் எத்தகைய பணத்தையும் செலுத்த தேவையில்லை என்பது நுகர்வோர் பொருட்கள் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சில உணவு விடுதிகள், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் MRP-யின் மீது GST வரிக்கான தொகையையும் இணைத்து பணம் வசூலிக்கின்றார்கள். ஒரு உணவு விடுதிலோ அல்லது சூப்பர் மார்க்கெட்டிலோ 20 ரூபாய் மதிக்கத்தக்க பொருளை வாங்கினால் அதற்கான பில்லில் 24 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எதற்காக கூடுதல் பணம் என்றுக் கேட்டால், GST வரிக்கு உண்டான தொகை என்றுக் கூறுகின்றனர்.

GST அமல்படுத்தியதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலையுடன் GST வரியை சேர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு இயலாதபட்சத்தில் பொருட்களின் மீதோ அல்லது அதன் மீது இருக்கும் அட்டைகளின் மீதோ ஸ்டிக்கர் போன்றவற்றை ஒட்டி விலையை மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

பொருட்களின் விலையானது அதிகரித்தால் அது பற்றிய செய்தியை செய்திதாள்களில் வெளியிட வேண்டும். ஒரு வேளையில் GST வரியை இணைத்து விலை குறைந்தால் அத்தகைய செய்திகளை வெளியிட அவசியம் இல்லை. அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட விலையை பொருட்களின் மீது அச்சடிக்க வேண்டும்.

பொருட்களின் மீதான அதிகபட்ச விலையை மீறி அதிகமாக பணம் வசூலிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு தண்டனையாக ஒரு வருடம் சிறை அல்லது ஓர் லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று GST ஆணையத்தின் உதவி ஆணையர் உமா சாந்தி கூறினார். மேலும், இது தொடர்பாக புகார்களை தெரிவிக்க www.tnlegalmetrology.inஎன்ற இணைய முகவரியை அணுகுமாறு கூறியுள்ளார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader