முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்திற்கு ராணுவப் பாதுகாப்பா ?

பரவிய செய்தி
அம்பானி வீட்டு திருமணத்தில் பாதுகாப்புக்கு காவல் படையினர் .
மதிப்பீடு
சுருக்கம்
முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்திற்கு ஆயுதப்படை வீரர்கள் பாதுகாப்புக்காக செல்லவில்லை, அம்பானி குடும்பத்தினர் அளித்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் கலந்து கொண்டனர்.
விளக்கம்
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மகன் ஆகாஷ் மற்றும் ஸ்லோகா ஆகியோரின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அவர்களின் திருமணத்திற்கு ஆயுதப்படை வீரர்களை மோடி அரசு அனுப்பி வைத்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நீதா அம்பானி உடன் ஆயுதப்படையைச் சேர்ந்த பாதுகாப்பு வீரர்கள் இருக்கும் புகைப்படங்கள் உடன் இந்த செய்தி தமிழில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றிய அறிய கூகுள் தேடலில் தேடும் பொழுதே உண்மை என்னவென்று தெரிந்து இருக்கும்.
திருமணக் கொண்டாட்டம் :
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோரின் மகன் ஆகாஷ் திருமணத்தை கொண்டாடும் வகையில் புது விதமான பிரத்யேகக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தனர்.
அதில், ராணுவ மற்றும் கப்பல் படை வீரர்கள் , மும்பை காவல்த்துறை, துணை ராணுவப் படையினர் , ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
bandra kurla complex மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட திருபாய் அம்பானியின் சதுக்கத்தில் மார்ச் 12-ம் தேதி நிகழ்ச்சி அரங்கேறியது.
நிகழ்ச்சியில் நாட்டைக் காக்கும் வீரர்கள் பற்றி பெருமைப்படும் விதத்தில் நீதா அம்பானி உரையாற்றினார். இந்த கொண்டாட்டத்தில் வீரர்கள், காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி நகரத்தின் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள், திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்ட பணியாட்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர் என செய்திகளில் வெளியாகி உள்ளது.
நீதா அம்பானி ஆயுதப்படை வீரர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்து தவறான செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.