முக்குலத்தோர் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என அண்ணாமலை கூறியதால் பிரதமர் மோடியின் பயணம் ரத்தா ?

பரவிய செய்தி

முக்குலத்தோர் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என அண்ணாமலை கூறியதால் தனது தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளும் பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி. ஏற்கனவே அந்த சாதியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை அவமானம் செய்திருந்தார் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பாஜக தலைவர் அண்ணாமலை முக்குலத்தோர் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என கூறியதால் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்ளும் பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக ட்விட்டர் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

2022 அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், இதையடுத்து முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் கலந்து கொள்ள மோடி வருவதாகவும் செய்தி ஊடகங்களில் வெளியாகியது.

மேலும் படிக்க : பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திற்கு தேவரின் பெயரை வைப்பதாகப் பரப்பும் போலிச் செய்தி கார்டு!

அதேபோல், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைக்கும் ஆணையை பிரதமர் மோடி வெளியிடுவதாகவும் போலிச் செய்தி வைரலாகியது.

Facebook link 

இதுகுறித்து விளக்கம் அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ” இந்த செய்தி எங்கிருந்து ஆரம்பித்தது என எனக்கு தெரியவில்லை. பிரதமர் வருகின்ற நிகழ்ச்சிகள் அனைத்துமே 2 மாதங்களுக்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டு இருக்கும். ஆகையால், 30ம் தேதி நமது பாரதப் பிரதமர் தமிழகம் வருகின்ற புரோகிராம் இல்லை. அதுபோன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரதமர் அலுவலகம் தரப்பில் இல்லை. எங்களை பொறுத்தவரையில் பிரதமர் மோடி அனைத்து குருபூஜைகளுக்கும் வர வேண்டும் என்பது எங்களின் ஆசை ” எனத் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, முக்குலத்தோர் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என அண்ணாமலை கூறியதாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் நிர்மல் குமாரைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” அது பொய்யான செய்தி ” எனத் தெரிவித்து இருந்தார். மேலும், பொய் செய்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link 

முடிவு : 

நம் தேடலில், முக்குலத்தோர் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என அண்ணாமலை கூறியதால் தனது தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளும் பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி எனப் பரப்பப்படும் தகவல் வதந்தி. பிரதமர் மோடி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொள்வதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புமே வெளியாகவில்லை என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader