This article is from Jun 05, 2018

நீரவ் மோடியின் ஆவணங்கள் தீயில் அழிந்து விட்டதா ?

பரவிய செய்தி

மும்பை வருமானவரி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நீரவ் மோடி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இனி வழக்குகள் அனைத்தும் தகுந்த ஆதாரம் இல்லாமல் முடித்து வைக்கப்படும்.
மதிப்பீடு

மதிப்பீடு

சுருக்கம்

வருமானவரி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு செய்த நீரவ் மோடியின் ஆவணங்கள் எரிந்து விட்டதாகக் கூறுவது தவறான செய்தி என இந்திய வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

விளக்கம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறையற்ற பணப்பரிவர்த்தனை என 11,000க்கும் அதிகமாக முறைகேடு செய்த குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருந்த மும்பை வருமானவரி அலுவலகம் ஜூன் 1-ம் தேதி தீ பிடித்து எரிந்துள்ளது. அதில் நீரவ் மோடி மற்றும் மேகுல் சோக்சி முறைகேடு தொடர்பான விசாரணை ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிவேகமாக வைரலாகின.

ஊடகங்களின் இணைய பக்கங்களில் கூட நீரவ் மோடி வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தீயில் அழிந்து விட்டதாக செய்திகளை வெளியிட்டன. ஹிந்தி நியூஸ் சேனலான ஜீ நியூஸ்-ல் தெற்கு மும்பையில் உள்ள பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள scindia கட்டிடம் தீக்கிரையானது. அதில் வருமானவரி அலுவலகத்தில் இருந்த PNB முறைகேடு சம்பந்தப்பட்ட நீரவ் மோடி மற்றும் ஐபிஎல் முறைகேடு செய்த லலித் மோடியின் ஆவணங்கள் அனைத்தும் தீயில் அழிந்து விட்டது என்று செய்தி வெளியானது.

Tribune india என்ற இணைய செய்திப் பக்கத்தில் வருமானவரி அலுவலகம் தீப் பற்றியது குறித்து வெளியான 2 கட்டுரைகளில் ஒரு கட்டுரையை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து கருத்து தெரிவித்து இருந்தது. இந்த பதிவு ஆயிரக்கணக்கான ஷேர்களை பெற்றது. மேலும், பலர் ட்விட்டரில் நீரவ் மோடி தப்பித்து சென்று விட்டார், அவரின் ஆவணங்கள் தற்போது எரிந்து விட்டது என்று பதிவிட ஆரம்பித்து விட்டனர்.

நேரடியாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நீரவ் மோடி ஆவணம் பற்றி வெளியாக செய்தி குறித்து ஜூன் 3-ம் தேதி விளக்கம் அளித்தது இந்திய வருமானவரித்துறை. 

Income Tax India-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், “ மும்பையில் scindia கட்டிடத்தின் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நீரவ் மோடி மற்றும் மேகுல் சோக்சி ஆகியோரின் விசாரணை சம்பந்தமான தரவுகள்/ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து விட்டதாக என ஊடகங்களின் சில பிரிவுகள் கூறுவது முற்றிலும் தவறு மற்றும் தவறாக திசை திருப்பப்பட்டது” என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும், ” நீரவ் மோடி விவகாரம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பதிவுகளை விசாரணையின் ஒரு பகுதியாக மதிப்பீடு செய்வதற்காக மற்றொரு கட்டிடத்தில் உள்ள மதிப்பீடு செய்யும் பிரிவிற்கு தீ விபத்து நடைபெறுவதற்கு முன்பாகவே மாற்றப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர் “.

வருமானவரித்துறை சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையை தொடர்ந்து தவறான செய்திகள் வெளியாகியதாக ஊடகங்களிலும், ட்விட்டரிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டன. தீ விபத்து நடைபெற்றது உண்மை எனினும், அதற்கு முன்பாகவே நீரவ் மோடியின் ஆவணங்கள் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டு, பாதுகாப்பாக உள்ளதாக வருமானவரித்துறை பதில் அளித்துள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader