மும்பையில் சாலையின் நடுவே கட்டப்பட்ட மசூதி என பரவும் மத்திய பிரதேச மசூதியின் புகைப்படம்!

பரவிய செய்தி
மும்பையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட மசூதி. இதுதான் இந்திய சிறுபான்மையினர் சுதந்திரம். எங்கே நடுநிலை ஹிந்துக்கள் ?
மதிப்பீடு
விளக்கம்
மும்பையில் நடிகை கங்கனா ரணாவத் உடைய அலுவலகம் அனுமதி இல்லாமல் கட்டுப்பட்டு உள்ளதாகக் கூறி அதனை அகற்றும் பணிகளை அம்மாநில அரசு மேற்கொண்டது. இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கால் கட்டிடம் இடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. நடிகையின் அலுவலகம் இடிக்கப்பட்டது தொடர்பான பதிவுகள் மற்றும் பேச்சுக்களில் மும்பையில் சாலையின் நடுவே கட்டப்பட்ட மசூதி என்றும், இதனை அகற்ற வேண்டும் என்றும் பலரும் இப்புகைப்படத்தை பதிவிட்டு வருவதை பார்க்க முடிந்தது.
சாலையின் நடுவே கட்டப்பட்ட மசூதியை அகற்றாத மாநகராட்சி நடிகையின் அலுவலகத்தை மட்டும் இடிப்பது ஏன் என்கிற கேள்விகளை இந்திய அளவில் பதிவிட்டு வருகிறார்கள். இந்திய அளவில் இப்புகைப்படம் பரவி வருவதால் அதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
மும்பையில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மசூதி என பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேர்ஜ் சேர்ச் செய்கையில், அந்த மசூதி மும்பையில் இல்லை, மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் எனும் பகுதியில் அமைந்து உள்ளது என அறிய முடிந்தது.
ஒரு மாதத்திற்கு முன்பாக, Baskar.com எனும் இணையதளத்தில் தற்போது வைரலாகும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. அதில், காட்ரா பஜார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்புகைப்படத்தையே மும்பை சாலையில் கட்டப்பட்ட மசூதி என பகிர்ந்து வருகின்றனர்.
புகைப்படத்தில் மசூதியை சுற்றி சாலைகள் அமைக்கப்பட்டு இருப்பதையும், மசூதி ஒரு ரவுண்டானா பகுதி போன்று தோன்றுவதை கூகுள் மேப் மூலம் காணலாம். புகைப்படத்தில் சாலையின் நடுவே மசூதி அமைக்கப்பட்டு உள்ளதாக தோன்றுகிறது. ஆனால், அந்த பகுதியே வணிக கடைகள் அதிகம் நிறைந்த பகுதியாகும். மசூதியிலும் கூட வணிக கடைகள் பல உள்ளன.
மத்தியப் பிரதேசத்தின் சாகர் நகரில் அமைந்துள்ள ஜமா மஸ்ஜித்(மராகஸ்) பெரிய அளவிலான பரப்பளவில் கட்டுப்பட்டு இருக்கிறது. அதனைச் சுற்றி பெரிய சாலைகளும், சிறிய சாலைகளும் உள்ளன. சாலையின் நடுவே மசூதி இருக்கிறது என்றாலும், சாலையின் நடுவே கட்டப்பட்டதா அல்லது மசூதி அமைக்கப்பட்ட பிறகு சுற்றி சாலைகள் வந்ததா என உறுதியாக தெரியவில்லை.
முடிவு :
நம் தேடலில், மும்பையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்டதாக பரவும் மசூதியின் புகைப்படம் மத்தியப் பிரதேசத்தின் சாகர் பகுதியில் அமைந்துள்ள ஜமா மஸ்ஜித் என அறிய முடிந்தது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.