This article is from Dec 15, 2019

மும்பையில் CAB, NRC-க்கு எதிராக முஸ்லீம் மக்களின் போராட்டமா ?

பரவிய செய்தி

மும்பையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கண்டன போரட்டம். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மும்பை முஹம்மது அலி சாலையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினார்கள்

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மும்பையில் உள்ள முஹம்மது அலி சாலையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம் சமுதாய மக்களின் கூட்டம் போராட்டத்தில் இறங்கி உள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேம்பாலம் அமைந்துள்ள பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும் காட்சி பதிவாகி உள்ள புகைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அதிகம் வைரலாகி வருகிறது. ஊடகத்தில் வராத செய்தி என முஸ்லீம் அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் இப்புகைப்படத்தை அதிகம் பகிரத் தொடங்கி உள்ளனர்.

உண்மை என்ன ? 

மும்பையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் கூட்டமாய் இருக்கும் புகைப்படம் குறித்து செய்திகளில் தேடிய பொழுது, முதன்மை ஊடகச் செய்தியிலோ அல்லது செய்தி ஊடக இணையதளங்களிலோ இப்புகைப்படம் எங்கும் இடம்பெறவில்லை.

ஆகையால், மேற்கொண்டு புகைப்படம் தொடர்பாக தேடிய பொழுது வைரலான படம் இடம்பெற்ற யூடியூப் வீடியோ கிடைத்தது.  2019 நவம்பர் 10-ம் தேதி ” Jashne Julus in Bangaladesh’s Chittagong ” எனும் தலைப்புடன் வெளியான வீடியோவில் இடம்பெற்ற இடமும், வைரலாகும் புகைப்படத்தின் இடமும் ஒன்றாக உள்ளன.

Youtube link | archived link

அதே நவம்பர் 10-ம் தேதி ட்விட்டர்வாசியின் பதிவில், மக்கள் கூட்டமாய் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஜாஷ்னே ஜுலஸ் என்பது நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான ஈத்-மிலாத்-உன்-நபி தினத்தை முஸ்லீம் சமூகம் பெருந்திரளாக கூடிக் கொண்டாடுவதாகும். இந்த ஆண்டில் பங்களாதேஷ் நாட்டின் சிட்டகாங் பகுதியில் நவம்பர் 9 மற்றும் 10 தேதியில் திருவிழா கொண்டாடப்பட்ட பொழுது அப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Twitter link | archived link

2019 நவம்பர் மாதம் பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற திருவிழாவின் பொழுது இருக்கும் முஸ்லீம் மக்களின் கூட்டத்தை டிசம்பர் 2019-ல் மும்பையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு, என்.ஆர்.சி-க்கு எதிராக கூடிய மக்கள் என தவறான செய்தியை இந்திய அளவில் பரப்பி வருகின்றனர்.

Please complete the required fields.




Back to top button
loader