உடைந்த தண்டவாளம் துணியால் கட்டி வைக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
மும்பையில் தண்டவாளம் உடைந்த இடத்தில் அதிகாரிகள் துணியைக் கட்டி ரெயிலை இயக்கிய சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
மும்பை துறைமுகப் பகுதியின் ரெயில்வே நெட்வொர்க்கில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அதிகாரிகள் அடையாளத்திற்காக பெயின்ட்க்கு பதிலாக துணியை கட்டி வைத்திருந்ததாக மத்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. தண்டவாளம் உடையவில்லை.
விளக்கம்
மும்பையில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் துணியினைக் கட்டி வைத்திருப்பதை பார்த்தவர்கள் அதனை வீடியோ எடுத்து அனைவருக்கும் எச்சரிக்கை செய்யும் நோக்கத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
அந்த வீடியோவில் மழையின் நடுவே தண்டவாளத்தை சுற்றி மக்கள் இருப்பதையும் காண முடிந்தது. வீடியோ பதிவிட்ட உடன் வேகமாக சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே கோபத்தை உண்டாக்கியது.
உடைந்த தண்டவாளத்தை துணியைக் கட்டி இணைத்து மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த கண்டனங்களுக்கு மத்திய ரெயில்வே உடனடியாக அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளது.
மும்பையின் துறைமுக ரயில்வே லைனில் இருக்கும் Mumbai suburban Govandi மற்றும் Mankhurd station இடையே உள்ள பகுதியில் நடைபெற்ற பழுதுபார்க்கும் பணியின் போது தண்டவாளத்தில் துணியைக் கட்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.
இதுக் குறித்து மத்திய ரெயில்வே கூறுகையில், “ உடைந்த தண்டவாளத்தை துணியைக் கொண்டு கட்டி வைத்து இருப்பதாக பரவும் வீடியோ சரியானது அல்ல. அந்த துணி உடைந்த பகுதியை இணைக்க கட்டவில்லை, அந்த இடத்தை அடையாளம் காண்பதற்காக கட்டப்பட்டது “ எனத் தெரிவித்து உள்ளனர்.
“ தண்டவாள இணைப்புகள் போல்ட்கள் கொண்டு இறுக்கமான இருக்கும். இப்பகுதியில் செல்லும் ரெயில்கள் அதிகாரிகள் அறிவுறுத்திய குறிப்பிட்ட வேகத்தில் செல்கிறது. அந்த துணி உடைந்த பகுதியை இணைப்பதற்காக அல்ல. மழையில் பெயின்ட் அழிந்து விடக் கூடும் என்பதால் அப்பகுதியை அடையாளம் காண்பதற்காக துணியை பயன்படுத்தியுள்ளனர் “ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஜூலை 2018-ல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றி செய்திகளும் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில் துணி கட்டி இருப்பது வட இந்தியாவில் அதிகம் பரவி இருந்தது.
தண்டவாளத்தில் இருக்கும் பழுதடைந்த பகுதிகளை மாற்றுவதற்காக அப்பகுதியை குறித்து வைக்க துணியினை கட்டி வைத்துள்ளனர். எனினும், மத்திய ரயில்வேவின் பதிலை அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. இது தொடர்பாக விசாரணை வேண்டும் என ஆர்வலர் சமீர் ஜவேரி கூறியுள்ளார்.