முஸ்லீம் மருத்துவர் 4,000 இந்து பெண்களுக்கு கருத்தடை செய்ததாக வதந்தி !

பரவிய செய்தி

தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 4,000 இந்து பெண்களின் கருப்பைகளை அகற்றி இன பெருக்கம் நடக்காமல் தவிர்த்த கொடூர இஸ்லாமிய டாக்டர் முகமது ரப்பீ.. இது புது வகையான ஜிகாத்.. இஸ்லாமிய மருத்துவர்கிட்ட சிகிச்சை பாக்குற பெண்கள் & குடும்பங்கள் ஜாக்கிரதை.

Facebook link | archived link

மதிப்பீடு

விளக்கம்

முஸ்லீம் மருத்துவர் தன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 4,000 இந்து பெண்களின் கருப்பையை அகற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் ஒருவரை அழைத்து செல்லும் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

Advertisement

கடந்த காலங்களில் இதுபோன்ற செய்திகள் அதிகம் பரவுதல் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம். பரப்பப்படும் செய்தியுடன் கூடிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மொஹமத் ஷஃபி டாக்டர் ஸ்ரீலங்கா என்ற பெயருடன் செய்திகளும் கிடைத்தன. 2019-ல் இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு முஸ்லீம் மக்கள் மீதான மதவாத தாக்குதல் அதிகரித்தது.

2019 மே மாதம் இலங்கையைச் சேர்ந்த பல முக்கிய செய்தித்தாள்களில், தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய முஸ்லீம் மருத்துவர் ஒருவர் 4,000 சிங்கள பௌத்த மத பெண்களுக்கு ரகசியமாக கருத்தடை செய்து உள்ளதாக வெளியாகியது. இலங்கையின் வடமேற்கு பகுதியில் உள்ள குருநெகலா எனும் நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் எனக் குறிப்பிட்டு செய்திகளில் வெளியாகியது.

இதையடுத்து, மே 24-ம் தேதி மருத்துவர் மொஹமத் ஷஃபி குருநெகலா காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தி நாடு முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மொஹமத் ஷஃபி மறுத்து இருந்தார்.

2019 ஜூன் 26-ம் தேதி வெளியான இந்தியா டுடே செய்தியில், ” சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்த 4,000 பெண்களுக்கு கருத்தடை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட முஸ்லீம் மருத்துவருக்கு இலங்கை நீதிமன்றம் பிணை வழங்கியதாக ” கூறப்பட்டுள்ளது.

Advertisement

2019 ஜூலை 5-ம் தேதி ஏஎஃப்பி தளத்தில், ” இலங்கை நீதிமன்றத்தில் 210 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்த இலங்கையின் குற்றவியல் விசாரணை துறை பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் கருத்தடை செய்ததாக கூறப்படும் சம்பவத்திற்கும் மருத்துவர் ஷஃபிக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் இல்லை என்றும், மருத்துவர் ஷஃபிக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என இலங்கையின் சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை தெரிவித்து உள்ளதாக ” வெளியிட்டு இருந்தது.

மேலும் படிக்க : இலங்கையில் முஸ்லீம்கள் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டதா ?

எனினும், மருத்துவர் ஷஃபி மீதான வழக்கு குறித்த பிற செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டில் இலங்கையில் சிங்கள பெண்களுக்கு நிகழ்ந்ததாக பரப்பிய செய்தியை இந்தியாவில் இந்து பெண்களுக்கு நிகழ்ந்ததாக வதந்தியைப் பரப்பி வருகிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க : முஸ்லீம் கடை பிரியாணியில் கருத்தடை மாத்திரைகளா ?| மருத்துவர் கூறும் தகவல்.

இதற்கு முன்பாக, இலங்கையில் முஸ்லீம் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகள் இருப்பதாக வதந்திகளை பரப்பி கலவரத்தை உண்டாக்கினர். அது தவறான தகவல் என வெளியிட்டு இருந்தோம். அதேபோல், இந்தியாவிலும் முஸ்லீம் உணவகங்களில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாக வதந்திகளை பரப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button