முஸ்லீம் பெண் தனது தந்தையைத் திருமணம் செய்து கொண்டதாகப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி
பொண்ணு அப்பாவை கல்யாணம் பண்ணிகிச்சு. அதை பெருமையுடன் சொல்லுது.
மதிப்பீடு
விளக்கம்
ஒன்றிய பாஜக அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இச்சட்டத்திற்குக் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இச்சட்டம் குறித்து ‘membersecretary-lci@gov.in’ என்ற மின்னஞ்சலுக்கு பொதுமக்கள் ஜூலை 14ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
🤦♀🤦♀ பொண்ணு அப்பாவை கல்யாணம் பண்ணிகிச்சு.நாலாவது மனைவியா ? அதை பெருமையுடன் சொல்லுது.
இது இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் விஷயம் ஆயிற்றே .
அடுத்து பேத்தியாலை திருமணம் செய்யிறதை எதிர் பாக்குறேன் pic.twitter.com/AbjQRLcDKA
— nakarajan k (@nakarajank2) July 7, 2023
இந்நிலையில் இஸ்லாமியர் ஒருவர் தனது மகளை 4வது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார் என்றும், அப்பெண் அதனைப் பெருமையுடன் சொல்கிறார் என்றும் வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளங்களில் வலதுசாரிகள் பரப்பி வருகின்றனர். அப்பதிவுகளில் ‘பொண்ணு அப்பாவை கல்யாணம் பண்ணிகிச்சு. நாலாவது மனைவியா ? அதை பெருமையுடன் சொல்லுது. இது இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் விஷயம் ஆயிற்றே’ என்று குறிப்பிடுகின்றனர்.
உண்மை என்ன ?
இஸ்லாமியர் ஒருவர் தனது மகளையே 4வது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார் எனப் பரவும் வீடியோவில் ‘zen tv vlogs’ என இருப்பதைக் காண முடிந்தது. அதனைக் கொண்டு அந்த யூடியூப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், 2022, ஜூலை மாதம் பதிவிடப்பட்டிருந்த வீடியோ ஒன்று கிடைத்தது. அதன் தலைப்பில் ‘ரபியா அமீர் கான்’ (Rabia Amir Khan) நேர்காணல் என்றுள்ளது. இது பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு யூடியூப் பக்கம்.
அப்பெயரைக் கொண்டு இணையத்தில் தேடியதில், 2021 மே மாதம் 29ம் தேதி ‘The Pakistan Observer’ எனும் இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், ‘நான் எனது மாணவியைத்தான் 4வது மனைவியாகத் திருமணம் செய்துள்ளேன். ஆனால், நான் முஃப்தி (இஸ்லாமிய சட்டம் சார்ந்து மிகுந்த அறிவு கொண்டவர்) இல்லை என்று அமீர் கான் கூறியுள்ளார்’ என்று செய்தியில் உள்ளது.
அவர்களின் டிக்டாக் வீடியோ வைரலானதை தொடர்ந்து Moin Zubair என்ற பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் அவர்களை நேர்காணல் எடுத்துள்ளார். அந்த நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு ‘Daily Pakistan’ என்ற இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் மேற்கண்ட தகவல்கள் மட்டுமே உள்ளது.
மேலும், ரபியா அமீர் கானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ‘Rabia Amir’ என்ற இணையதளத்தைக் குறிப்பிட்டு இருந்தார். அதில் அவர்களது கடை பாகிஸ்தான் லாகூரில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பரவக் கூடிய வீடியோ பற்றித் தேடியதில் கிடைத்த செய்திகள் எதிலும், மகள் தனது தந்தையைத் திருமணம் செய்து கொண்டதாகக் குறிப்பிடப்படவில்லை. இதிலிருந்து பரவக் கூடிய வீடியோ பொய் என்பதும், அது பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், இஸ்லாமியர் ஒருவர் தனது மகளையே திருமணம் செய்து கொண்டதாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல. அதில் 4வது மனைவி என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. மேலும் அந்நிகழ்வு பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.