பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லீம் மாணவி !

பரவிய செய்தி
பகவத் கீதை போட்டியில் கிடைத்த 11 லட்சத்தையும் இந்த முஸ்லீம் சிறுமி ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக தானம் செய்துள்ளார். பாராட்டுங்கள் மத பாகுபாடு இனிமேலும் வேண்டாம்.
மதிப்பீடு
சுருக்கம்
பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்றதற்கு மரியம் ஆசிப் சித்திகு பரிசாக பெற்ற 12 லட்சத்தில் இருந்து பெரிய தொகையை பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். மேலும், பல விதத்தில் அரசிற்கு நன்கொடைகளையும் அளித்து இருக்கிறார்.
விளக்கம்
2015-ல் மார்ச் மாதம் மும்பையைச் சேர்ந்த 12 வயதான மரியம் ஆசிப் சித்திகு என்ற மாணவி மும்பையில் நடந்த பகவத் கீதை சேம்பியன் லீக் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த சிறுமி பகவத் கீதை போட்டியில் முதல் பரிசு பெற்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது.
மும்பையில் இஸ்கான் அமைப்பு கீதை சேம்பியன் லீக் போட்டியை நடத்தி இருந்தது. போட்டியானது பகவத் கீதை குறித்து எழுத்து தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 195 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டனர். ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதை நூலில் இருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கும் எழுத்து தேர்வை நடத்தினர்.
இதில், மும்பையின் காஸ்மோபாலிட்டன் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த மரியம் ஆசிப் சித்திகு அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, மரியம் ஆசிப் மாணவிக்கு உத்திரப்பிரதேச முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் சான்றிதழ், விருது உடன் அரசு சார்பில் 11 லட்சம் பரிசுத் தொகையையும் அளித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மாணவியை குடியரசுத்தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, பலரும் மாணவிக்கு பரிசுத் தொகையை அளித்து இருந்தனர். கீதை போட்டியில் கிடைத்த 5,001 பரிசுத் தொகை உள்பட போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இரண்டு மாதங்களில் கிடைத்த பரிசுத் தொகையின் எண்ணிக்கை ரூ12 லட்சத்தை எட்டியது.
2015 ஜூன் மாதத்தில் மாணவி பரிசுத் தொகையில் இருந்து 10,000-த்தை குஜராத் முக்ய மந்திரி ஸ்வச்சத் நிதிக்கு நன்கொடையாக அளித்தார். குஜராத் முதல்வர் ஆனந்திபென் அவர்களை அலுவலகத்தில் நேரில் சந்தித்த பொழுது அளித்தார். மாணவி பிறந்தது குஜராத் மாநிலத்தில் உள்ள ஷ்ப்பூர் பகுதியில் என்பதால் குஜராத் மாநிலத்திற்கு நிதி அளித்ததாக மாணவியின் தந்தை தெரிவித்து இருந்தார்.
அதே ஜூன் மாதத்தில் மாணவி சித்திகு பிரதமர் மோடியை சந்தித்து பாராட்டுகளைப் பெற்றார். அப்போழுது, தேசிய நிவாரண நிதி மற்றும் ஸ்வச்சத் அபியான் ஆகிய இரண்டிற்கும் தலா ரூ.11,000-த்தை நன்கொடையாக அளித்ததாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், போட்டியில் பெற்றி பெற்ற பிறகு கிடைத்த பரிசுத் தொகையில் பெருந்தொகையை நன்கொடையாக வழங்குவது அல்லது பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை அளிக்க திட்டமிட்டதை மாணவி சித்திகு தெரிவித்து இருப்பதாக 2015-ல் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
முஸ்லீம் மாணவி பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்றது உண்மையே. 2015-ல் நிகழ்ந்த சம்பவம் தற்பொழுது பகிரப்பட்டு உள்ளது. மாணவி சித்திகு தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் மத்திய, மாநில அரசிற்கு நன்கொடை அளித்து இருக்கிறார். பரிசுத் தொகையில் இருந்து பெருந்தொகையை பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை வழங்குவதாக கூறியதும் உண்மையே.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.