இந்துக்களைத் திருமணம் செய்து மதம் மாறுவோம் எனப் பாத்திமா குரோஷி என்பவர் கூறியதாகப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
இஸ்லாமியர்கள் பெண்களைப் பிள்ளை உருவாக்கும் இயந்திரமாகக் கருதுவது கொடுமையானது. எனவே, இஸ்லாமியப் பெண்கள் இந்துக்களைத் திருமணம் செய்து மதம் மாறுவோம் என மும்பையைச் சேர்ந்த பாத்திமா குரோஷி என்பவர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
மேலும், அவர் இஸ்லாத்தில் அடிமைத்தனம், தலாக், படுதா மற்றும் காம இயந்திரமாக வாழ்வதிலிருந்து விடுதலை பெறுவோம் எனக் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
மும்பை பாத்திமா குரோஷி என்னும் பெயரைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், அப்பெயரில் கிடைக்கப்பட்ட பெண் புகைப்படங்களில் பரவக் கூடியவரின் புகைப்படம் இல்லை. இதிலிருந்து படத்தில் இருப்பவரின் பெயர் பாத்திமா குரோஷி இல்லை என்பதை அறிய முடிந்தது. மேற்கொண்டு கூகுள் ரிவேர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் இணையத்தில் தேடினோம்.
பரவக் கூடிய புகைப்படம் ‘World Education’ என்னும் இணையதளத்தில் உள்ளதைக் காண முடிந்தது. 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி பதிவிடப்பட்டுள்ள அக்கட்டுரையில், புகைப்படத்தில் இருப்பது ‘மரியம் காலிக்’ (Mariam Khalique) என்ற பாகிஸ்தான் பள்ளி ஆசிரியர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலாவின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் “பிஸ்மில்லாஹ்! அல்லாஹ்வின் பெயரால்” எனக் கூறிய பிறகே தனது உரையினை தொடங்கியுள்ளார். மேலும், அவரது உரை முழுவதிலும் பரவக் கூடிய புகைப்படத்தில் இருப்பது போல ஹிஜாப், முத்தலாக் குறித்தோ, மதம் மாறுவது தொடர்பான கருத்துக்களையோ கூறவில்லை என்பதை அக்கட்டுரையின் வாயிலாக அறிய முடிந்தது.
மேற்கொண்டு தேடியதில், யுனெஸ்கோவின் இணையதளத்தில் அதே ஹிஜாப்புடன் இருக்கும் வேறொரு புகைப்படமும் கிடைக்கப்பட்டது. அதில், “மரியம் காலிக், பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகள் பற்றிப் பேசுகிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் பேஸ்புக் பக்கத்திலும் 2013, செப்டம்பர் மாதம் அவர் குழந்தைகள் மத்தியில் ‘கல்வியால் உலகையே மாற்ற முடியும்’ எனக் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசியது தொடர்பாகவே பதிவிடப்பட்டுள்ளது. வேறு சில தளங்களிலும் அவரது புகைப்படங்களை காண முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், மும்பை பாத்திமா குரோஷி என்னும் இஸ்லாமியப் பெண் இந்துக்களைத் திருமணம் செய்து மதம் மாறுவோம் எனப் பேசியதாகப் பரவும் புகைப்படத்தில் இருப்பது மலாலாவின் ஆசிரியர் ‘மரியம் காலிக்’ ஆவார். அவர் எந்த இடத்திலும் இந்துவாக மதம் மாறுவதாகவோ, ஹிஜாப் மற்றும் தலாக்கிற்கு எதிராகவோ பேசவில்லை என்பதை அறிய முடிகிறது.