இந்து பெண்களுக்கு தாய்மாமாவாக இருந்து மணம்முடித்து வைத்த இஸ்லாமியர்| தத்தெடுத்ததாக பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
மகாராஷ்டிராவில் ஒரு இஸ்லாமிய அண்ணன் தான் வளர்த்த இரண்டு இந்து சகோதரிகளை இந்து முறைப்படி ஒரே நேரத்தில் கல்யாணம் முடித்து கொடுத்துள்ளார் இதுதான் என் நாட்டின் சிறப்பம்சம்.
மதிப்பீடு
விளக்கம்
மகாராஷ்டிராவில் இஸ்லாமியர் ஒருவர் இரண்டு இந்து சகோதரிகளை தத்தெடுத்து வளர்த்து, அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்ததாக இரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு மொழிகளில் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்ள ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.
இதுகுறித்து தேடிய போது, மலையாளம் நியூஸ்18 செய்தி மற்றும் scoopwhoop ஆகிய இரு இணையதளங்களில் ட்விட்டரில் வெளியான தகவலை அடிப்படையாக வைத்து பதிவிட்டு இருந்தனர். அவற்றில், ” மகாராஷ்டிராவின் அஹ்மத்நகரைச் சேர்ந்த பாபாபாய் பதான் எனும் முஸ்லீம் நபர் இரு சகோதரிகளை தத்தெடுத்து மற்றும் தனது சொந்த செலவில் இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார் ” என வெளியாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் இளைஞர் காங்கிரஸின் தலைவர் சத்யஜீத் தாம்பே தன் ட்விட்டர் பக்கத்தில், ” நகர் மாவட்டத்தில் உள்ள போதகானைச் சேர்ந்த திருமதி பூசாரேவுக்கு சகோதரர் இல்லாததால், அவர் ஒவ்வொரு ஆண்டும் பாபாபாய் பதானுக்கு ராக்கியைக் கட்டுகிறார். நேற்று, பூசாரே குடும்பத்தின் இரண்டு மகள்களின் திருமணத்தில் பாபாபாய் மாமாவாக சடங்குகளைச் செய்தார் மற்றும் சகோதரரின் கடமைகளையும் செய்தார். சமூக மற்றும் மத நல்லிணக்கத்தின் அழகான உதாரணம் ” என பதிவிட்டு இருந்தார்.
नगर जिल्ह्यात बोधेगाव येथील श्रीमती भुसारे यांना भाऊ नसल्याने त्या दरवर्षी बाबाभाई पठाण यांना राखी बांधतात.
काल भुसारे कुटुंबीयांच्या दोन्ही मुलींच्या लग्नात बाबाभाई यांनी मामाचे विधी स्वहस्ते केले व भावाचे देखील कर्तव्य निभावले.
सामाजिक व धार्मिक सलोख्याचे एक सुंदर उदाहरण…. pic.twitter.com/rMFsEecugs
— Satyajeet Tambe (@satyajeettambe) August 23, 2020
இதேபோல், ஆகஸ்ட் 23-ம் தேதி ஆரிஃப் ஷா எனும் பத்திரிக்கையாளர் தன் ட்விட்டர் பக்கத்தில், ” மகாராஷ்டிராவின் அஹ்மத்நகரைச் சேர்ந்த பாபாபாய் பதான் எனும் முஸ்லீம் நபர் இரு சகோதரிகளை தத்தெடுத்து மற்றும் தனது சொந்த செலவில் இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார் ” என இரு புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார். அந்த ட்வீட் பதிவில் கவுரவ் தேடே என்பவர், ” திருத்தங்கள் ! பாபாபாய் மாமாவாகவே தன் கடமைகளை செய்து உள்ளார். ஏனெனில், தன் கணவனை இழந்த இரு பெண்களின் தாய் பாபாபாய் பதானுக்கு ராக்கி கட்டி வந்துள்ளார். அந்த இரு பெண்களும் அனாதைகள் அல்ல மற்றும் பாபாபாய் பதானால் தத்தெடுக்கவும் இல்லை ” எனப் பதிவிட்டு இருந்தார்.
Make correction plz baba bhai pathan performing a role of uncle. Bcz mother of two girls ties a Rakhi to baba pathan as she was helpless after death of her husband. That girls not orphan and not adopted by baba pathan 🙏
— Gaurao Thete (@Gauraotweets) August 23, 2020
மேற்கொண்டு தேடுகையில், ஜீ நியூஸ் செய்தி நிறுவனம் சகோதரிகளின் திருமண நிகழ்ச்சி, இப்பெண்களின் தாய் மற்றும் பாபாபாய் அளித்த பேட்டியையும் செய்தியாக வெளியிட்டு உள்ளனர். அதிலும், மாமாவாக இருந்து சடங்குகளை செய்ததாகவே வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமியரான பாபாபாய் பதான் என்பவர் தனக்கு ராக்கி கட்டிய பூசாரே உடைய இரு மகள்களின் திருமணத்தில் மாமாவாக இருந்து சடங்குகளை செய்து இருக்கிறார். இச்செயல் பாராட்டுக்குரியது. ஆனால், அப்புகைப்படங்கள் இரு இந்து சகோதரிகளை தத்தெடுத்து, வளர்த்து திருமணம் செய்து வைத்த அண்ணன் என தவறாக பரவி வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.