கேரளா மாலில் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்தவர் முஸ்லீம் எனப் பொய் பரப்பும் சரவண பிரசாத் !

பரவிய செய்தி
கேரளாவின் கொச்சியில், புர்கா அணிந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர், பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து, பெண்களை ரகசியமாக வீடியோ எடுக்கத் தொடங்கினார். மால் செக்யூரிட்டி ஊழியர்கள் அவரை பார்த்ததும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர், குற்றம் சாட்டப்பட்ட முஸ்லீம் நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் ரோபோடிக்ஸ் பொறியாளர் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
மதிப்பீடு
விளக்கம்
கேரளாவின் கொச்சியில் பெண்கள் கழிவறையில் இருந்து வீடியோ பதிவு செய்த முஸ்லீம் நபர் என்று கூறி புர்கா அணிந்துள்ள இளைஞர் ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தை சரவண பிரசாத் உட்பட வலதுசாரிகள் பலரும் பரப்பி வருவதையும் காண முடிந்தது.
It’s Very Shocking 🚨 🇮🇳
In Kerala’s Kochi, a burqa-clad Muslim youth entered the ladies’ washroom and then secretly started making videos of women.
As soon as the mall security staff caught sight of him, there was an uproar. After this, the accused Muslim was1/2 pic.twitter.com/t8mvsFRo5r
— Izlamic Terrorist (@raviagrawal3) August 18, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் முஸ்லீம் இளைஞர் அல்ல என்பதை உறுதி செய்ய முடிந்தது.
இதுகுறித்து இந்தியா டுடே ஊடகம் நேற்று (ஆகஸ்ட் 17) வெளியிட்ட கட்டுரையில், “கொச்சியில் புர்கா அணிந்து பெண்கள் கழிப்பறையில் இருந்து வீடியோ பதிவு செய்த 23 வயது இளைஞரை கொச்சி போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் செவ்வாய்கிழமை மாலை பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. அபிமன்யு என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், கொச்சியில் பணிபுரியும் ரோபோடிக்ஸ் பொறியியல் பட்டதாரி ஆவார். கைது செய்யப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது IPC பிரிவுகள் 354(C) (voyeurism), 419 (ஆள்மாறாட்டம்) மற்றும் IT சட்டத்தின் பிரிவு 66E ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படமானது News 18 Virals தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவின் கீபிரேம்களோடு ஒத்துப் போவதையும் காண முடிந்தது.
இந்த வீடியோவின் விளக்கத்திலும் “கேரளாவில் உள்ள பிரபல லுலு மால் ஒன்றில் இருந்து ஒரு ஆச்சரியமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லுலு மாலில் உள்ள பெண்கள் கழிவறைக்குள் புர்கா அணிந்த ஒருவர் நுழைந்துள்ளார். கழிவறையில் அந்த நபர், தனது மொபைலை எடுத்து வீடியோவை ஆன் செய்துள்ளார். அதன் பிறகு அந்த இளைஞன் அங்கே உள்ள அட்டைப் பலகையின் உள்ளே ஒரு சிறிய துளை செய்து கதவில் ஒட்டியுள்ளான். குற்றம் சாட்டப்பட்ட ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டு அவரது மொபைல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அபிமன்யு என்ற இளைஞர் புர்கா அணிந்து பெண்கள் கழிவறைக்குள் சென்றதை, முஸ்லீம் இளைஞர் எனக் கூறி வகுப்புவாதத்தைத் தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: முஸ்லீம்கள் பகுதியில் இந்துக்களை நுழைய விடவில்லை என வலதுசாரிகள் தவறாகப் பரப்பும் சித்தரிப்பு வீடியோ !
மேலும் படிக்க: இந்து எனக் கூறி லவ் ஜிகாத் செய்ய முயன்ற முஸ்லீம் இளைஞர்களுக்கு போலீஸ் தடியடி எனப் பரவும் பொய் !
முடிவு:
நம் தேடலில், கேரளாவின் மாலில் புர்கா அணிந்து பெண்கள் கழிவறைக்குள் நுழைந்தது முஸ்லீம் நபர் என்று பரவி வரும் செய்திகள் தவறானவை. அந்த இளைஞர் கொச்சியில் பணிபுரியும் ரோபோடிக்ஸ் பொறியியல் பட்டதாரியான அபிமன்யு என்பதை அறிய முடிகிறது.