இஸ்லாமியர் ஒருவர் சிறுநீர் பயன்படுத்தி பாப்கார்ன் தயாரித்ததாகப் பரவும் பொய் செய்தி !

பரவிய செய்தி
பாப்கார்ன் ஸ்டால் வைத்துள்ள நயாஸ், பெங்களூரில் உப்புக்கு பதில் மூத்திரம்,கலந்து பாப்கார்ன் தயாரிக்கும் போது, கையும் களவுமாகப் பிடிபட்டான்! முஸ்லீம்களை திருத்த முடியாது. குழந்தையின்மை சிகிச்சை மையங்கள் அதிகரிக்க காரணம் என்ன? கருத்தடை மருந்து கலக்கும் பிரியாணி
மதிப்பீடு
விளக்கம்
பெங்களூரில் பாப்கார்ன் கடை வைத்துள்ள நவாஸ் என்பவர் உப்புக்குப் பதிலாகச் சிறுநீர் கலந்து பாப்கார்ன் தயாரித்ததாகவும், அதனைத் தொடர்ந்து அந்நபரைக் காவல் துறையினர் கைது செய்தார்கள் என்றும் வீடியோ ஒன்று பாஜகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
பாப்கார்ன் ஸ்டால் வைத்துள்ள நயாஸ்,பெங்களூரில் உப்புக்கு பதில் மூத்திரம்,கலந்து பாப்கார்ன் தயாரிக்கும் போது, கையும் களவுமாகப் பிடிபட்டான்! முஸ்லீம்களை திருத்த முடியாது.
😡😡😡😡😡 pic.twitter.com/UtmWcNl3iF— Thirunavukkarasu.s (@Thiruna84952891) July 15, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய ‘tv9’ வீடியோவில் ‘கடைக்காரர் பாப்கார்ன் தயாரிக்கும் எண்ணெயில் மூன்று முறை எச்சில் துப்பினார். நான் அதனைப் பார்த்தேன். அவன் ஒரு முஸ்லிம்’ என ஒருவர் குற்றம் சாட்டுகிறார். அவருக்கு அருகில் உள்ள காவலர்கள் எச்சில் துப்பியதாகச் சொல்லப்படும் எண்ணெய்யைப் பரிசோதனைக்காகக் கையகப்படுத்துகின்றனர்.
இந்த சம்பவம் பெங்களூரில் நடந்ததாகவும், அந்த பாப்கார்ன் வியாபாரியின் பெயர் நயாஸ் என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. இதனைக் கொண்டு இணையத்தில் தேடியதில், இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் கிடைத்தது.
பெங்களூர் லால்பாக்கில் நவாஸ் பாஷா என்ற பாப்கார்ன் விற்பனையாளர் ஒருவர் பாப்கார்ன் தயாரிக்கும் எண்ணெயில் எச்சில் துப்பியதாகக் கூறி ஒரு கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இது பற்றி ‘தி நியூஸ் மினிட்’ தளத்தில் 2022, ஜூன் 14ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், எண்ணெய் பாக்கெட்டை திறப்பதற்காக வாயில் கடித்தபோது அதனைப் பார்த்த ஒருவர் எண்ணெயில் எச்சில் துப்பியதாகக் கூறி ரகளையில் ஈடுபட்டார். மேலும் அவர்கள் நவாஸை தாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு வந்த காவல் அதிகாரி ஒருவரைப் பார்த்ததும் நவாஸை கைது செய்ய வேண்டும் எனச் சிலர் கூறியுள்ளனர். ஆனால், புகார் அளிக்க மறுத்துள்ளனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க நவாஸை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் வைத்திருந்த எண்ணெய் பாட்டிலையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேற்கொண்டு அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு, ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நவாஸ் நியூஸ் மினிடுக்கு அளித்த நேர்காணலில், ‘நான் எண்ணெயில் எச்சில் துப்பியதாகச் சொன்னவர் எனது பெயரைக் கேட்டார். நவாஸ் என்று சொன்னதும். இவன் முஸ்லீம், எண்ணெயில் எச்சில் துப்புகிறான். இவன் ஒரு முஸ்லீம் என அருகில் இருந்தவர்களை அழைத்தார். நான் அப்படிச் செய்யவில்லை. வேண்டுமென்றால் எண்ணெய்யைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
இதே போல் தன் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக நவாஸ் கூறியது, 2022, ஜூன் 23ம் தேதி ‘தி இந்து’ இணையதளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘என் மீது குற்றம் சாட்டியவர் நான் எண்ணெய் பாக்கெட்டை பிரிக்கும் போது அதில் எச்சில் துப்பியதாகச் சலசலப்பை உருவாக்கத் தொடங்கினார். நான் அவரைப் பரிசோதிக்கச் சொன்னேன் மற்றும் குற்றமற்றவர் என்று மன்றாடினேன். என்னைக் காவல் துறையினர் கைது செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால், புகார் அளிக்க ஸ்டேஷனுக்கு கூட வரவில்லை’ என்று கூறியுள்ளார்.
தற்போது பரவும் செய்தியில் பாப்கார்ன் தயாரிக்கச் சிறுநீர் பயன்படுத்தப்பட்டது என்றுள்ளது. ஆனால், அந்த சம்பவம் நடந்த போது (2022) அவர் எண்ணெயில் எச்சில் துப்பியதாகவே கூறப்பட்டுள்ளது. அதுவும் உண்மை அல்ல என்றும், தான் இஸ்லாமியர் என்பதால் தன் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாகவும் நவாஸ் முன்னதாகவே மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக, இஸ்லாமியர்களின் கடைகளை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும். அவர்கள் கடையில் பொருள் வாங்கக் கூடாது என வலதுசாரிகள் பலர் பிரச்சாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : முஸ்லீம் கடை பிரியாணியில் கருத்தடை மாத்திரைகளா ?| மருத்துவர் கூறும் தகவல்.
முன்னதாக இஸ்லாமியர்கள் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலப்பதாக பல போலி செய்திகள் பரப்பப்பட்டது. அதன் உண்மைத் தன்மை குறித்தும் யூடர்னில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : முஸ்லீம் வியாபாரி இந்து ஆண்களுக்கு ஜூஸ் மூலம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக வதந்தி !
முடிவு :
நம் தேடலில், இஸ்லாமியர் ஒருவர் பாப்கார்ன் தயாரிக்கும் போது சிறுநீர் பயன்படுத்தியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. பரவக் கூடிய வீடியோ 2022ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அவர் எண்ணெயில் எச்சில் துப்பியதாகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தற்போது சிறுநீர் என பரப்புகின்றனர். இத்தகைய குற்றச்சாட்டு தான் இஸ்லாமியர் என்பதால் தன் மீது சுமத்தப்படுவதாக நவாஸ் தெரிவித்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.