மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவான போராட்டத்திற்காக முஸ்லீம்கள் சீக்கியர் வேடம் அணிவதாகப் பரப்பப்படும் தவறான வீடியோ !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக டெல்லியை நோக்கி விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். அவர்களை எல்லையில் தடுத்து நிறுத்தி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்லாமியர் ஒருவர் தலையில் அணிந்து இருந்த தொப்பியை நீக்கி விட்டு சீக்கியர்கள் அணியும் தலைப்பாகையை(டர்பன்) கட்டி விடும் காட்சிகள் அடங்கிய 15 நொடிகள் கொண்ட வீடியோவை ” போராட்டத்திற்கு காஸ்டியூம் ரெடியாகுது ” எனக் கூறி சமூக வலைதளங்களில் வலதுசாரிகள் பலரும் வைரல் செய்து வருகின்றனர்.
போராட்டத்திற்கு காஸ்டியூம் ரெடியாகுது pic.twitter.com/w4hvnWN3Kl
— E Chidambaram. (@JaiRam92739628) May 7, 2023
இப்பதிவுகளில் அந்தோலன் ஜீவி எனக் குறிப்பிட்டு உள்ளனர். அதற்கு தொழில்முறை போராட்டக்காரர்கள், அதாவது போராடுவதையே தொழிலாக வைத்திருப்பவர்கள் என்று பொருள்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து அதில் பஞ்சாபி மொழியில் உள்ள வார்த்தைகளை மொழிப்பெயர்ப்பு செய்து பார்க்கையில், ” Dastar Training Camp. Veer Sidhu Moose Wale’s last prayer ” எனக் காண்பித்தது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாடகரான சித்து மூஸ் வாலா 2022ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த சித்து மூஸ் வாலா கடந்த ஆண்டு மே 29ம் தேதி பஞ்சாபின் மான்சா மாவட்டத்தின் ஜவஹர்கே என்ற பகுதியில் ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
2022ல் சித்து மூஸ் வாலா கொலையானது கும்பல்களுக்கு இடையேயான போட்டியின் விளைவால் நடந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இக்கொலைக்கு கனடாவைச் சேர்ந்த கோல்டி ப்ரார், அதனுடன் தொடர்புடைய பஞ்சாப் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டதாகச் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
2022 ஜூன் 8ம் தேதி சித்து மூஸ் வாலாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திகளில் வெளியாகி இருக்கிறது. இச்செய்தியில் இடம்பெற்ற சித்து மூஸ் வாலா புகைப்படத்துடன் கூடிய பேனர், வைரல் செய்யப்படும் வீடியோவிலும் இடம்பெற்று இருக்கிறது.
மேலும், சித்து மூஸ் வாலாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கு டர்பன் கட்டி விடும் காட்சிகள் 2022 ஜூன் 8ம் தேதி வெளியான குயின்ட் செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், போராட்டத்திற்காக இஸ்லாமியர் ஒருவர் சீக்கியர் வேடம் அணிவதாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது, இது போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது அல்ல. 2022ம் ஆண்டு பஞ்சாப்பில் கொலை செய்யப்பட்ட பாடகர் சித்து மூஸ் வாலாவின் இறுதி அஞ்சலிக்கு வந்தவர்களுக்கு டர்பன் அணிவித்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.