பாரத மாதா படத்தை வைக்க இஸ்லாமிய பெண் எதிர்ப்பு தெரிவித்ததாக பரப்பப்படும் மத வதந்தி வீடியோ!

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஜனவரி 26 குடியரசு தின நிகழ்ச்சியின் போது பாரத மாதா படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனைவரையும் இஸ்லாமிய மாணவி ஒருவர் தாக்கியதாக 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
ஜனவரி 26 நிகழ்ச்சியின் போது பாரத மாதா படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைவரையும் தாக்கும் இஸ்லாமிய மாணவி
நம் நாட்டில் இத்தனை சுதந்திரத்தோடு இருக்கும் இவர்களுக்கா பாதுகாப்பு இல்லை
அதிக சுதந்திரமும் கொடுப்பது ஆபத்து என்பதை இந்தியா உணர வேண்டும்.
இங்கு இருப்பவர்களும் உணர வேண்டும் pic.twitter.com/qOdHc7kgl0— செந்தில் அழகேசன் (@Alagesantwt) February 2, 2022
உண்மை என்ன ?
மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் லோதா அமரா குடியிருப்பு வளாகத்தில் ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற குடியரசுதின விழாவின் போது, அங்கிருந்த பெண் குடியிருப்புவாசி பாரத மாதா படத்தை பிடிங்கி, அங்கிருந்த பாதுகாவலர்களை தாக்கி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்குள்ளவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கபூர்பாவ்தி காவல்நிலையத்தில் அப்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து 2022 ஜனவரி 28-ம் தேதி mendayout இணையதளத்தில் வெளியிட்ட கட்டுரையில், பிரச்சனையில் ஈடுபட்ட பெண்ணின் பெயர் ” கனிகா புபேந்தர் சேக்ரி ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பெண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நிகழ்ந்த சம்பவம் குறித்து பதிவிட்டு உள்ளதாகவும் இடம்பெற்று இருக்கிறது.
கனிகா புபேந்தர் சேக்ரி தன் ட்விட்டர் பக்கத்தில், ” இந்திய தேசத்தில் சிறு குழந்தைகள் முதல் அனைத்து பெண்களும் பாலியல் வன்கொடுமை, அசிட் வீச்சு உள்ளிட்ட பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறாரார்கள். இப்படி பெண்கள் மீதான தாக்குதலை நிகழ்த்தும் ஆண்கள் தங்கள் கறைபடிந்த கைகளால் பாரத மாதா படத்தை எடுப்பதை எதிர்ப்பு தெரிவித்ததாக ” ஜனவரி 27-ம் தேதி விரிவாக ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், ஜனவரி 26 குடியரசு தின நிகழ்ச்சியின் போது பாரத மாதா படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனைவரையும் தாக்கிய இஸ்லாமிய மாணவி என வீடியோ உடன் பரப்பப்படும் தகவல் தவறானது. அந்த பெண்ணின் பெயர் கனிகா புபேந்தர் சேக்ரி, அவர் இஸ்லாமியர் அல்ல, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.