இஸ்லாமிய பெண் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாகப் பேசியதாக பாஜகவினர் பரப்பும் பொய்யான வீடியோ !

பரவிய செய்தி
அவுங்க ஒன்னும் நிர்வாணமாக நடிக்கலையே நான் ஏன் படம் பார்க்ககூடாது? தி கேரளா ஸ்டோரி
மதிப்பீடு
விளக்கம்
‘தி கேரளா ஸ்டோரி’ என்னும் திரைப்படத்தின் டீசர் வெளியான போதே பல்வேறு சர்ச்சைகள் தொடங்கியது. இத்திரைப்படம் வெறுப்புணர்வையும் வன்முறையையும் ஏற்படுத்தக்கூடும் எனக் கூறி மேற்கு வங்காளத்தில் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்குத் தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், படத்தினை திரையிடப்போவதில்லை எனத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பர்தா அணிந்த இஸ்லாமியப் பெண் ஒருவர் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவாகப் பேசியதாக வீடியோ ஒன்று பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
https://twitter.com/Rubin_tn/status/1656133636947836928
சூப்பர்🔥🔥
அவுங்க ஒன்னும் அம்மணமாக நடிக்கலையே நான் ஏன் படம் பார்க்ககூடாது?
யூடுப் சேனல் நடத்திகிட்டு இவங்க தொல்லை தாங்கமுடியளடா வாழ்த்துகள் சகோதரி செருப்பால அடிச்சமாதிறியான பதில்#TheKeralaStory 💥 pic.twitter.com/OMFRwo5qel
— SURULIVEL K (@SURULIVEL1971) May 10, 2023
அப்பெண் பேசுகையில், “படத்திற்கு முஸ்லிம்கள் அனுமதி இல்லை, ஹிஜாப் அணிந்திருந்தாள் அனுமதி இல்லை என கூறிவிடுங்கள். அவர்கள் என்ன நிர்வாணமாகவா நடித்துள்ளார்கள். அதுக்கும் இந்த உடைக்கும் என்ன சம்பந்தம். என்னோட உரிமை நான் திரைப்படத்தைப் பார்ப்பேன். உங்களுக்கு என்ன பிரச்சனை” எனப் பேசியுள்ளார்.
உண்மை என்ன ?
இஸ்லாமியப் பெண் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகப் பரவும் வீடியோவில் உள்ள ஒரு மைக்கில் ‘Voice of Madras’ என உள்ளது. மேலும் பேசுபவரின் பின்னால் கமலா சினிமாஸ் என இருப்பதையும் பார்க்க முடிகிறது.
இதனைக் கொண்டு அந்த யூடியூப் பக்கத்தில் தேடினோம். 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி “சண்டையில் முடிந்த Movie Review Oh My Ghost Review | Public Review” என்ற தலைப்பில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
அதன் தலைப்பில் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தின் ரிவீவ் என்று உள்ளது. அத்திரைப்படம் சன்னி லியோன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தர்ஷா குப்தா மற்றும் பலர் நடித்து 2022, டிசம்பர் மாதம் வெளியாகியுள்ளது. ரிவீவ் வீடியோவிலும் இந்நடிகர்கள் பற்றி பலரும் குறிப்பிட்டுப் பேசுவதைக் காண முடிகிறது.
இத்திரைப்படம் குறித்து Voice of Madras யூடியூப் பக்கத்திலுள்ள வீடியோவின் 2 நிமிடம் 10வது வினாடியில் பர்தா அணிந்த அப்பெண்மணி பேசியுள்ளார். கேள்வி கேட்பவர் ‘இந்த திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்’ எனக் கேட்டுள்ளார். “திரைப்படம் பார்ப்பது எனது உரிமை. உங்களுக்கு என்ன பிரச்சனை” என அப்பெண்ணும் பதிலளித்துள்ளார்.
மேலும், ஓ மை கோஸ்ட் திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது தவறான தகவல். அப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழே அளிக்கப்பட்டுள்ளது. A சான்றிதழ் அளிக்கப்பட்ட திரைப்படத்தினையும் 18 வயது நிரம்பிய அனைவரும் பார்க்கலாம் என்பதே விதிமுறை. ஆண்கள் பார்க்கலாம், பெண்கள் பார்க்கக் கூடாது என்பது போன்ற எந்த விதியும் கிடையாது.
‘Thi Cinemas’ என்னும் யூடியூப் பக்கத்திலும் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ரிவீவ் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் பர்தா அணிந்த அதே பெண் பேசியுள்ளார். இவற்றிலிருந்து அவர் கூறியது தி கேரளா ஸ்டோரி படத்திற்கான கருத்து அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் படிக்க : ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை பிரச்சாரமாக்கிய பிரதமர்.. 32,000 பெண்கள் என்பதை நீக்குகிறோம் என்ற படத்தின் தயாரிப்பாளர் !
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டீசரில் கேரளாவைச் சேர்ந்த 32,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டு இருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சமூக வலைத்தள பக்கங்களிலிருந்து அதனை நீக்குவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். இத்திரைப்படம் குறித்து நீண்ட ஒரு கட்டுரையை யூடர்ன் வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு இஸ்லாமியப் பெண் ஆதரவாகப் பேசியதாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல. அது 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்திற்காகப் பேசியது என்பதை அறிய முடிகிறது.