மெரினாவில் காவலரை வெட்டியது யார் ?| இஸ்லாமியர்கள் போராட்டமென வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
சென்னை மெரினா கடற்கரையில் குடும்பத்துடன் வந்த பெண்களிடம் கஞ்சா போதையில் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 3 இஸ்லாமிய இளைஞர்களை தட்டிக்கேட்க சென்ற உதவி ஆய்வாளர் அகிலனுக்கு சரமாரி வெட்டு, கைது செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதாக கண்ணிற்கு கீழே வெட்டுக் காயத்துடன் இருக்கும் காவலரின் புகைப்படமும், இரத்தத்துடன் இருக்கும் காவலர் உடையின் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
3 Thookars teasing and molestation women at Marina beach. Police SI Akilan enquire with them. 3 Jihadis attacks SI with knives, both addicted with Marijona or Kanja. Pissfull mob picketing PS.
This is Tamil nadu state? or Taliban state? pic.twitter.com/96iUn7CtEn— Nandagopal.K.M. (@nandaji1958) August 28, 2020
மெரினாவில் காவலர் தாக்கப்பட்ட பதிவை ஃபேஸ்புக் தளத்தில் விரிவாக தேடிய போது கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே இப்பதிவு புகைப்படத்துடன் வைரலாகி இருந்ததை கண்டறிய முடிந்தது. இதையடுத்து, 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பரவும் பதிவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
மெரினாவில் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்தவை அல்ல என்பதை 3 ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் வெளியான பதிவுகள் மூலம் அறிய முடிகிறது. கீ வார்த்தைகளை கொண்டு சம்பவம் குறித்த செய்திகளை ஆராய்கையில், 2017 ஆகஸ்ட் 22-ம் தேதி ” மது அருந்திய வாலிபர்களை விரட்டிய போது ஆயுதப்படை காவலருக்கு சராசரி கத்தி குத்து : மெரினாவில் பரபரப்பு சம்பவம் ” எனும் தலைப்பில் தினகரன் இணையதளத்தில் காவலர் அகிலனின் புகைப்படத்துடன் வெளியான செய்தி கிடைத்தது.
” மெரினா போலீஸ் பீச் பக்கி வாகனத்தில் மணல் பரப்பில் ரோந்து பணி மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிசை மாற்று வாரிய அலுவலகம் எதிரே உள்ள கடல் மண் பரப்பில் வாலிபர்கள் இரண்டு பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மெரினா காவல் நிலைய ஆயுதப்படை காவலர் அகிலன் பீச் பக்கி வாகனத்தில் ரோந்து வந்த போது இதைக் கண்டுள்ளார். அகிலன் அந்த வாலிபர்களிடம் இங்கு மது அருந்தக் கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார். ஆனால், அவ்விருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த வாலிபர்கள் காவலர் அகிலனை தாக்கியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போது அந்த வாலிபர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அகிலனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
காவலரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்த பொது மக்கள் ஓடிவந்தனர். ஆனால், உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்துள்ளனர். எனினும், அங்கிருந்து தப்பிக்க முயன்ற வாலிபர்களில் ஒருவரை அங்கிருந்த சிலர் துரத்தி பிடித்துள்ளனர். இதையடுத்து, மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த காவலர் அகிலனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்த நபரை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அண்ணாநகரைச் சேர்ந்த ஹரிராம் என்றும், தப்பி ஓடிய நபர் தினேஷ் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, ஹரிராம் மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை வேலை செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தினேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர் ” என தினகரன் செய்தியில் வெளியாகி இருக்கிறது. இதே செய்தி ஆகஸ்ட் 21-ம் தேதி புதியதலைமுறையிலும் வெளியாகி இருக்கிறது.
2017 ஆகஸ்ட் 22-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியிலும், குடிபோதையில் இருந்த வாலிபர்களால் சென்னை காவலர் அகிலன் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என ஹரிராம் மற்றும் தினேஷ் ஆகியோரின் பெயர்களே இதிலும் இடம்பெற்று இருக்கிறது.
2017 ஆகஸ்ட் மாதம் மெரினா கடற்கரை பகுதியில் குடிசை மாற்று வாரியத்திற்கு எதிரே மது அருந்திய ஹரிராம் மற்றும் தினேஷ் எனும் இரு இளைஞர்களை தட்டிக் கேட்க சென்ற ஆயுதப்படை காவலர் அகிலன் கத்தியால் தாக்கப்பட்டு உள்ளார். இதனால் கண்ணிற்கு கீழே வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வாலிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால், நிகழ்ந்த சம்பவத்தை இஸ்லாமியர்களை வைத்து புதிய கதையாக மாற்றியுள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் காவல் நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கதையில் இணைத்துக் கொண்டுள்ளனர். சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்காமல் மதம் சார்ந்த வன்மத்தை உருவாக்க போலிச் செய்திகளை உருவாக்கி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், மெரினா கடற்கரையில் கஞ்சா போதையில் பெண்களிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 3 இஸ்லாமிய இளைஞர்களை தட்டிக்கேட்க சென்ற உதவி ஆய்வாளர் அகிலனுக்கு சரமாரி வெட்டு என பரப்பப்படும் தகவல் திரிக்கப்பட்ட தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.