பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவிற்கு ஆதரவாக போராட்டமா ?|உலாவும் வீடியோ !

பரவிய செய்தி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஷியா முஸ்லிம்கள் ஒன்றுகூடி இந்துஸ்தான் வாழ்க, பாகிஸ்தான் ஒழிக எனக் கோசமிட்டு பாகிஸ்தான் கொடியை தீயிட்டுக் கொளுத்துவதாக இச்செய்தி கூறுகிறது! இது உண்மையானால் இங்கே மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிப்பதில் அர்த்தமில்லை தானே! அடியும் வலியும் படுபவனுக்குத்தானே தெரியும்!.
மதிப்பீடு
விளக்கம்
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெற்ற பிறகு இந்திய அளவில் எதிர்ப்பும், ஆதரவும் நிலவுகிறது. இந்நிலையில், காஷ்மீர் தொடர்பான வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டே வருகிறது.
அதில் ஒன்றாக, காஷ்மீர் மாநிலத்தின் மீது இந்திய அரசு அதிரடி நடவடிக்கையை கொண்டு மேற்கொண்ட பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முஸ்லீம் மக்கள் தங்களையும் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் நாட்டின் கொடியை எரித்து போராட்டம் செய்வதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நிகழ்ந்த போராட்டத்தின் வீடியோ என தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வீடியோவானது வைரலாகி இருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் போராட்டம் நிகழ்ந்ததாக கூறும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
முஸ்லீம்கள் பாகிஸ்தான் கொடியை எரித்தனர் என்ற வரிகளை வைத்து தேடுகையில் 2016-ல் gd videos என்ற யூட்யூப் சேனலில் ” Indian Muslim community burn Pakistan flag ” என்ற தலைப்பில் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ பதிவாகி இருந்தது.
மூன்று வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த Usman Shani Masood என்பவரது முகநூல் பக்கத்திலும் இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது. அதில், ” Darul Uloom Deoband India ” என்ற வார்த்தை இடம்பெற்று இருந்தது.
Mullah’s Of Darul Uloom Deoband India burns Pakistani flag & chanting anti-Pakistan’s slogans . #PakistanZindabad pic.twitter.com/EMdMeycLg3
— Nisar Mehdi (@nisarmehdi) September 28, 2016
அதனை வைத்து தேடுகையில், இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள Darul Uloom Deoband பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தான் கொடியை எரித்து, பாகிஸ்தானிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த Nishar mehdi என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் 2016 செப்டம்பர் 28-ம் தேதி பதிவாகி உள்ளது.
ஆனால், இந்தியாவில் உள்ள Darul Uloom Deoband பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் கொடியை எரிக்கவில்லை, வீடியோவில் இருப்பது பல்கலைக்கழகத்தின் கட்டிடமும் இல்லை என அறிக்கை விட்டதாக டெய்லி பாகிஸ்தான் தளத்திலேயே 2016-ல் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
பாகிஸ்தான் கொடியை முஸ்லீம்கள் தீயிட்டு எரிப்பது இந்தியாவில் நிகழ்ந்தது என்று பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நிகழ்ந்தது என்று இந்தியர்களும் பதிவிட்டு வருகின்றனர். எனினும், இந்த வீடியோவின் தொடக்கம் குறித்து தெரியவில்லை.
ஆனால், காஷ்மீரின் சமீபத்திய விவகாரத்திற்கும், வைரலாகும் வீடியோவிற்கும் தொடர்பில்லை என்பதை கிடைத்த ஆதாரங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.