முஸ்லீம் கடை பிரியாணியில் கருத்தடை மாத்திரைகளா ?| மருத்துவர் கூறும் தகவல்.

பரவிய செய்தி
முஸ்லீம்களால் நடத்தப்படும் ஹோட்டல்களில் பிரியாணி உணவுகளில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இந்துக்கள் யாருக்கும் குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்காக இந்த வேலைகளில் முஸ்லீம்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்துக்கள் யாரும் முஸ்லீம்களின் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள் அவை உங்களுக்கு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும்.
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் வைரலாகி வரும் செய்தியில், முஸ்லீம்கள் நடத்தி வரும் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் பிரியாணி உணவுகளில் இந்துக்களுக்கு எதிராக கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தி வருகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலுடன் பிரியாணி உடன் இருக்கும் நபர் மற்றும் மாத்திரை அட்டை ஆகிய இரு புகைப்படங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு பரப்பப்படும் தகவல்களானது மக்களின் உடல்நலம் குறித்த பதற்றத்தையும், இந்து முஸ்லீம் மக்களுக்கு இடையே வன்முறையை தூண்டும் விதத்தில் அமைந்து இருப்பதால், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் தகவலில் அளிக்கப்பட்டு இருக்கும் மாத்திரை அட்டையின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் ” Combination Birth control pills ” எனும் முடிவுகள் நமக்கு கிடைத்தன. இணையத்தில் கிடைக்கக்கூடிய பிறப்புக்கட்டுப்பாடு மாத்திரைகளின் புகைப்படங்களை வைரல் செய்தியில் பயன்படுத்தி உள்ளார்கள்.
அடுத்ததாக பிரியாணி உடன் இருக்கும் நபரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018 செப்டம்பர் 24-ம் தேதி இந்தியன் முஸ்லீம் பிரியாணி செய்வது குறித்த வீடியோவில் முகப்பு படமாக அந்நபரின் புகைப்படம் பயன்படுத்தி இருக்கிறார்கள். எனினும், இப்புகைப்படத்தில் இருப்பவர் யார் எனத் தகவல்கள் இல்லை.
கருத்தடை மாத்திரைகளை உணவில் பயன்படுத்தினால் எம்மாதிரியான விளைவு நேரிடும் என்பதை அறிந்து கொள்ள மருத்துவர் பிரவீன் அவர்களிடம் யூடர்ன் தொடர்புக் கொண்டு பேசிய பொழுது,
” இந்த புகைப்படத்தில் இருப்பது பெண்கள் கருத்தரிப்பதை தள்ளிப்போட பயன்படுத்தப்படும் ஓசிபி(Oral Contraceptive pills) எனும் கருத்தடை மாத்திரை. இதில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெட்ரோன் ஆகிய இரு ஹார்மோன்கள் இருக்கும். பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி நடைபெறும். அவர்கள் கர்ப்பம் அடைவதை தவிர்க்க நினைத்தால் இந்த மாத்திரைகளை மாதவிடாய் முடிந்த பிறகு எடுத்துக் கொள்ள தொடங்குவார்கள். அந்த மாத்திரை அட்டையில் பார்த்தாலே தெரியும், முதல் 21 நாட்களுக்கு ஹார்மோன் மாத்திரை, அடுத்த 7 நாட்களுக்கு வைட்டமின் மாத்திரை என வித்தியாசம் இருக்கும். புகைப்படத்தில் இருப்பது மருத்துவர்கள், அரசாங்கம் என பொதுவாக புரிந்துரை செய்யும் மாத்திரையே. இந்த மாத்திரையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெட்ரோன் ஆகிய ஹார்மோன்கள் பெண்களின் உடலில் இருப்பது, ஆண்களில் அவை இருக்காது. இந்த மாத்திரையை தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் பெண்கள் எடுக்க வேண்டும். ஒருவேளை மாத்திரை எடுப்பதை நிறுத்தினால் இரண்டாம் நாளே மாதவிடாய் மீண்டும் வந்து விடும். ஒரு மாத்திரை எடுப்பதாலோ அல்லது மொத்தமாக எடுப்பதாலோ எந்த பயனுமில்லை. கருத்தடை மாத்திரைகள் பெரும்பாலும் பெண்களுக்கானது மட்டுமே. இவை தற்காலிக பயன்பாட்டிற்கு உகந்தவை. ஆண்களுக்கு மில்லியன் கணக்கில் ஸ்ஃபெர்ம் உற்பத்தி இருக்கும் என்பதால் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது இல்லை. ஆண்களுக்காக Gossypol எனும் கருத்தடை மாத்திரை அறிமுகப்படுத்தினார்கள். எனினும், அந்த மருந்தின் செயல்திறனும் குறைவானது, தற்காலிகமானது.
பரவிய செய்தியில் கூறியது போன்று பிரியாணியில் 21 மாத்திரைகளையும் கலந்து கொடுத்து விட்டார்கள் என்று வைத்துக் கொண்டால், அதிக அளவில் ஹார்மோன் செல்வதால் தலைவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கும். பின்னர் மருந்தின் வீரியம் குறைந்த பிறகு இரண்டாம் அல்லது மூன்றாம் நாளில் மாதவிடாய் வந்து விடும். இந்த மாத்திரைகள் நிரந்தரமான கருத்தடை பயன்பாட்டிற்கு இல்லை. ஆண்களைப் பொறுத்தவரையில், இந்த மாத்திரைகளை சாப்பிட்டு விட்டால் ஒரு மாத்திரைக்கெல்லாம் ஒன்றும் ஆகாது. 21 மாத்திரைகளை மொத்தமாக சாப்பிட்டால் மார்பகத்தில் வலியோ அல்லது முடி கொட்டும் பிரச்சனையோ ஏற்படும். ஆண்களின் ஸ்ஃபெர்ம் உற்பத்திக்கு டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் தேவை. இதையெல்லாம் விட, கருத்தடை மாத்திரைகளை சூடான உணவுடன் வைத்தால் செயல்திறன் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. இந்த மாத்திரைகளை சாப்பிட்டால் நிரந்தரமான கருத்தடை ஏற்பட வாய்ப்பில்லை. அறுவை சிகிச்சைகள் மூலமே நிரந்தரமான கருத்தடையை ஏற்படுத்திக் கொள்ளலாம். தவறான தகவல்களை பரப்பி மக்களிடையே மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்கள் ” எனக் கூறியுள்ளார்.
பரப்பப்படும் செய்தியில் எந்த மாநிலத்தில், எந்த ஊரில், எந்த கிராமத்தில் அல்லது நகரத்தில் உள்ள ஹோட்டல்களில் முஸ்லிம்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள் என விவரக்குறிப்புகள் ஏதுமில்லை. அப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது எனக்கூறுபவர்கள் அது தொடர்பான தகவல்களை இணைக்கவில்லை. இது தொடர்பாக சமீபத்தில் ஏதேனும் செய்திகள் வெளியாகியதா எனத் தேடினால் அதுவும் இல்லை. முஸ்லீம் கடைகளில் கருத்தடை மாத்திரைகள், இந்துக்கள் சாப்பிட வேண்டாம் என்ற வார்த்தைகளை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது இந்து-முஸ்லீம் பிரச்சனையை தூண்டவே வதந்தி தகவலை பரப்பி இருக்கிறார்கள்.
இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவது முதல்முறை அல்ல. 2018-ம் ஆண்டில் இலங்கையில் உள்ள அம்பரா பகுதியில் முஸ்லீம்கள் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து உள்ளதாக வதந்தியை பரப்பியதால் முஸ்லீம்-சிங்கள மக்களிடையே மதவாத மோதல் உருவாகியது. இதனால் குற்றம்சாட்டப்பட்ட உணவகம் அடித்து நொறுக்கப்பட்டதோடு எரிக்கப்பட்டது.
மேலும் படிக்க : இலங்கையில் முஸ்லீம்கள் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டதா ?
நாட்டில் மக்களிடையே மத வெறுப்புணர்வை பரப்பும் விதத்தில் பலவிதமான வதந்திகளையும், தவறான தகவல்களையும் சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள் என்பதை நம் கண்முன்னே பார்க்கிறோம். ஒவ்வொரு மதத்திற்கும் எதிராக இப்படி பரப்பப்படும் வதந்திகள் முடிவுக்கு கொண்டுவர முடியாமல் தொடர்கதையாய் செல்கிறது.
முடிவு :
நம்முடைய தேடலில், இந்துக்களை குறி வைத்து முஸ்லீம் உணவகங்களில் வழங்கப்படும் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் வதந்தி. ஆதாரமில்லாத செய்தியை பரப்பி மத வெறுப்புணர்வை உருவாக்க முயல்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.