முஸ்லீம்கள் மாடியில் கூட்டாக தொழுகை செய்யும் புகைப்படம்| இந்தியாவைச் சேர்ந்தது இல்லை.

பரவிய செய்தி
ஹிந்துகளே பார்த்து புரிந்து கொள்ள முயற்சியுங்கள். கொரோனாவாவது கூந்தலாவது.. இவனுங்க இருக்கும் வரை கொரோனா பரவலை அந்த ஆண்டவனாலயும் கட்டுப்படுத்த முடியாது. இந்த சமூகம் ஒரு முடிவோட தான் இருக்காங்க போல.. ஒட்டு மொத்த புறக்கனிப்பே இனி தீர்வாகும். வேற வழி எங்களுக்கு தெரியல பாய்.பி.கு : நட்பில் உள்ள நல்ல பாய் நண்பர்கள் தயவு செஞ்சி மன்னிச்சிருங்க.
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருக்கும் தருணத்தில் முஸ்லீம்கள் வீடுகளின் மாடியில் கூட்டமாக தொழுகை செய்வதாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனக் கூறி மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
இந்திய அளவில் வைரலாகும் புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டது போல் தெரியவில்லை. ஆகையால், அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் , சவூதி அரேபியா மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளைக் குறிப்பிட்டு இப்புகைப்படம் ட்விட்டர், முகநூல் பக்கங்களில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் பகிர்வதற்கு முன்பே பிற நாடுகளிலும் இப்புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். எனினும், புகைப்படம் எடுக்கப்பட்ட சரியான இடம் எங்கு என்பதில் முடிவுக்கு வர முடியவில்லை.
கட்டிடங்களின் மாடிகள் காண்பிக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் தொலைவில் மசூதி ஒன்றின் கட்டிடம் தென்படுவதையும், நதி அல்லது கடல் போன்று நீர் பாதை அமைந்து இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு தேடுகையில், அப்பகுதி துபாயில் இருக்கிறது என்பதை கண்டுபிக்க முடிந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள கட்டடக்கலை பாரம்பரிய துறையின் தளத்தில் வைரல் புகைப்படத்தில் இருக்கும் குவிமாடம் மற்றும் மினரெட் போன்றவை அமைந்து இருக்கும் கட்டிடத்தின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது.
கூகுள் தளத்தில் செயற்கைகோள் பார்வையில் காணும் பொழுது மசூதியில் இருந்து நீர் நிலைக்கு மற்றொரு பக்கத்தில் இருக்கும் கட்டிடங்களின் அமைப்பை காண முடிகிறது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தியாவில் வைரலாகும் முஸ்லீம்கள் தொழுகை செய்யும் புகைப்படம் துபாயில் எடுக்கப்பட்டு உள்ளது. எனினும், இப்புகைப்படம் எப்பொழுது எடுக்கப்பட்டது, யார் பதிவிட்டார்கள் என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. இந்தியாவில் ஊரடங்கு அறிவித்த தொடக்கத்தில் ஒரு சில இடங்களில் ஊரடங்கை கடைபிடிக்காமல் மசூதியில் தொழுகைக்கு கூட்டம் கூடிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக இந்த புகைப்படத்தை தவறாக பரப்பி உள்ளார்கள்.
இதிலிருந்து, முஸ்லீம்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், கொரோனாவை பரப்பும் நோக்கில் தொழுகையை நடத்தியதாக பரப்பப்படும் புகைப்படம் தவறானது. அதற்கும் இந்தியாவிற்கும் தொடர்பில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.