மயில்சாமி அண்ணாதுரை சூர்யாவிற்கு ஆதரவாக பேசினாரா ?

பரவிய செய்தி
சூர்யா கேள்வி கேட்க இந்திய குடிமகன் என்ற தகுதி போதுமானது- மயில்சாமி அண்ணாதுரை.
மதிப்பீடு
விளக்கம்
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசிய பிறகு ஆளும் அரசுக்கு ஆதரவு அளிப்பவர்கள் தொடர்ந்து அவருக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்தனர். எனினும், சூர்யாவின் பேச்சிற்கு பிறகு தேசிய கல்விக் கொள்கை குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகம் சென்றடைந்தது.
இந்நிலையில், இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சூர்யாவிற்கு ஆதரவு அளிப்பது போன்ற கருத்தை கூறியதாக சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியது. அதில், ” சூர்யா கேள்வி கேட்க இந்திய குடிமகன் என்ற தகுதி போதுமானது ” என மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கூறியதாக இடம்பெற்று இருந்தது.
முகநூலில் ஒரு செய்திச் சேனலின் நியூஸ் கார்டு போன்று இருந்த அப்பதிவின் நம்பகத்தன்மை குறித்து ஆராய முற்பட்டோம். ” சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்த மயில்சாமி அண்ணாதுரை ” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடுகையில் தந்தி டிவியில் மயில்சாமி அண்ணாதுரை குறித்த செய்தியே முதலில் வந்தது.
சென்னை தியாகராயர் நகரில் ” வானம் வசப்படும் ” அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மயில்சாமி அண்ணாதுரை புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சு குறித்தும் பேசி இருந்தார்.
” கற்க கசடற என்று கூறிய மொழியில் கல்விக் கற்க கூடாது என சொல்வது, அந்த கல்வியைப் பற்றி எண்ணுகிற பொழுது எழுத்துக்கள் இல்லாத மொழியை படிக்க சொல்வது சரியானதே கிடையாது. ஏனென்றால், அந்த காலத்தில் கல்விக்கு அதிகாரமே வைத்திருக்கிறார்கள். அந்த சமயத்தில், சில மொழிகளுக்கு எழுத்துக்கள் கூட இல்லை. அந்த மொழியில் பேச வேண்டும் என்பது எனக்கு சரியாகப்படவில்லை. இதனை பல இடங்களில் நான் கூறி இருக்கிறேன். என்ன ? சூர்யா சொல்வது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது, மயில்சாமி கூறியது வரவில்லை ” என மயில்சாமி அண்ணாதுரை பேசியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, இந்திய குடிமகன் என்ற ஒரு தகுதி மட்டுமே கேள்வி எழுப்ப சூர்யாவிற்கு போதுமான தகுதி என்று லெனின் பாரதி ஆவேசமாக கூறியுள்ளார்.
இயக்குனர் லெனின் பாரதி கூறிய வார்த்தைகளுக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் புகைப்படத்தை வைத்த காரணத்தினால் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. எனினும், மயில்சாமி அண்ணாதுரை சூர்யாவை எடுத்துக்காட்டாக வைத்து மொழிக் குறித்த தன் கருத்தை மேடையில் பேசி இருக்கிறார்.
முடிவு :
செய்தியின் நியூஸ் கார்டில் லெனின் பாரதி கூறிய வார்த்தைகளுக்கு மயில்சாமி அண்ணாதுரையின் புகைப்படத்தை வைத்ததே குழப்பத்திற்கு காரணம். எனினும், தமிழ் மொழி, கல்வி குறித்தும் மயில்சாமி அண்ணாதுரை பேசி இருக்கிறார்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.